திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மோசடி செய்த நபரிடமிருந்து பணம் பெற்று தர வலிறுத்தி மண்ணெணய் கேன்களுடன் பெண்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கரிகாலத் தெருவை சோ்ந்தவர் சுஜாதா(50). இவர் திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடியை சோ்ந்த ரவிசந்திரனிடம் ரூ17 லட்சம் கொடுத்தாகவும் அந்த தொகையை திரும்ப தர மறுத்து வருவதாகவும் நன்னிலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் நன்னிலம் காவல்துறையினர் புகரை எடுக்க மறுத்துள்ளனர். மேலும் ரவிசந்திரன் அடியாட்களை கொண்டு மிரட்டியிருக்கிறார்.
அச்சமடைந்த சுஜாதா திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று மண்ணெணெய் கேன்களுடன் தீக்குளிக்கும் எண்ணத்துடன் வந்துள்ளார். காவல்துறையினர் சுஜாதா கையில் பையை சோதனை செய்த போது மண்ணெணெய் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அதனை பிடுங்கி சுஜாதா மற்றும் அவருடன் வந்த இரு பெண்களை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
சுஜாதா சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், "ரவிசந்திரன் தொண்டு நிறுவனம் நடத்தி வருவதாகவும் அந்த நிறுவனத்திற்கு வேறு தொண்டு நிறுவனத்திலிருந்து 100 கோடி ரூபாய் வருவதாகவும் அதனை பெறவேண்டுமானால் 17 லட்சம் ரூபாய் வேண்டும். அதனை தாங்கள் தந்தால் பணம் வந்தவுடன் தந்து பணத்துடன் லாபத்திலும் பங்கு தருவதாக ஆசை வார்த்தை கூறினார். இதனை நம்பி பணம் கொடுத்தேன். நீண்ட நாட்கள் பணம் தராததால் பணத்தை திருப்பி கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்.
இந்த மோசடியில் காவல்துறையினர் ரவிசந்திரனுக்கு ஆதரவாக செயல்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரை பார்க்க வந்தோம் . ஆனால் அவரை பார்க்க அனுமதி மறுத்து திருப்பி அனுப்பி விட்டனர். அதன் காரணமாக தான் மனமுடைந்து வாழ்வதை விட செத்து விடுவது மேல் என மண்ணெண்ணெய்யுடன் வந்தேன்," என்றார்.