Skip to main content

உயிருக்குப் போராடிய குரங்கை காப்பாற்றிய பொறியியல் பட்டதாரி!

Published on 05/01/2022 | Edited on 05/01/2022

 

Engineering graduate saves monkey

 

சாலைகளில் விபத்துக்கள் நடந்தாலும் வேறு ஏதேனும் பெரிய அசம்பாவிதங்கள் நடக்கும் இடங்களில் விபத்துக்களில் அடிபட்டு துடிதுடிக்கும் மனிதர்களையோ விலங்குகளையோ காப்பாற்றுவதற்கு முயற்சி செய்பவர்கள் குறைவு. ஆனால் அப்படிப்பட்ட நிகழ்வுகளை பார்ப்பவர்கள் தங்களது செல்போன் மூலம் வளைந்து வளைந்து படம் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்புவதில் காட்டும் அக்கறையை உயிருக்கு போராடும் மனிதர்களையோ விலங்குகளையோ காப்பாற்றுவதற்கு யாரும் முன் வருவதில்லை. ஆனால் ஒரு இளைஞர் மனித நேயத்தோடு விபத்தில் காயமடைந்த ஒரு குரங்கை காப்பாற்றியுள்ளார்.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே சேலம் -கடலூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதில் செம்பளாகுறிச்சி- அனுமந்தல் ஆகிய கிராமங்களுக்கு இடையில் வனத்துறைக்கு சொந்தமான கிருஷ்ணாபுரம் காப்புக்காடு உள்ளது. இந்த சாலை வழியாக செல்பவர்கள் அப்பகுதியில் உள்ள மரங்களில் தங்கியிருக்கும் குரங்குகளுக்கு பழங்கள், பிஸ்கட் போன்ற உணவுப்பொருட்கள் ஆகியவற்றை வாங்கிவந்து அந்த இடத்தில் போட்டு விட்டு செல்வார்கள். குரங்குகள் கூட்டம் கூட்டமாக அந்த தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இதற்காகவே காத்துக்கொண்டிருக்கும். குரங்குக் கூட்டம் அப்படி கிடைக்கும் தின்பண்டங்களை தின்று உயிர் வாழ்ந்து கொண்டு இருந்தது.

 

அளவுக்கதிகமாக குரங்குகள் கூட்டம் அந்த பகுதியில் காணப்படுவதால் சாலையில் செல்லும் வாகனங்கள் அந்த இடத்தில் மெதுவாகத்தான் செல்லவேண்டும். அந்த அளவுக்கு குரங்குகள் கூட்டம் அதிகம். சம்பவத்தன்று அப்படி கூட்டமாக நின்ற ஒரு குரங்கின் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் அடிபட்ட குரங்கு சாலையோரத்தில் மயங்கி கிடந்தது. அந்த வழியாக சின்ன சேலம் அருகிலுள்ள வி.அலம்பலம் கிராமத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி பிரபு(42) என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது குரங்கு அடிபட்டு கிடப்பதை பார்த்துள்ளார்.

 

உடனே அந்த குரங்கை தனது இருசக்கர வாகனத்தில் எடுத்துச்சென்று அங்கிருந்த குடிநீர் குழாயிலிருந்து தண்ணீர் பிடித்து அதன் மேல் ஏற்பட்ட காயத்தை சுத்தம் செய்தார். அது குடிப்பதற்கும் தண்ணீர் கொடுத்தார். கொஞ்சம் மயக்கம் தெளிந்தது பிறகு குரங்கை மீண்டும்  காப்புகாடு அருகே கொண்டு சென்று விட்டுள்ளார். அது கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்குத் திரும்பி மற்ற குரங்குகள் சேர்ந்து அது வாழ்விட பகுதிக்குச் சென்றது. இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வந்த நிலையில், அந்த பொறியாளர் பிரபுவுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்