18 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன.
இத்தகைய சூழலில் சில தினங்களுக்கு முன்பு நீலகிரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழந்து பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், தொடர்ந்து ஈரோட்டிலும் அதனைத் தொடர்ந்து தென்காசியிலும் இதே போன்று ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தன.
இந்நிலையில் சென்னையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்கள் தடை செய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டு தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் ஜூன் நான்காம் தேதி வரை சென்னையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள மூன்று வாக்கு எண்ணும் மையங்களுக்கு இந்தத் தடை உத்தரவு பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் சென்னைக்கு உட்பட்ட இயந்திரங்கள் அண்ணா பல்கலைக்கழகத்திலும், வடசென்னைக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் ராணி மேரி கல்லூரியிலும், மத்திய சென்னைக்கு உட்பட்ட வாக்கு இயந்திரங்கள் லயோலா கல்லூரியிலும் வைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று வாக்கு எண்ணும் மையங்களிலும் நான்கடுக்கு போலீசார் போடப்பட்டு 24 மணி நேரமும் கூடுதல் போலீசார் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர். 150க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் ஸ்ட்ராங் ரூம் பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணும் நாளான ஜூன் 4-ம் தேதி வரை இந்த மூன்று பகுதிகளும் 'ரெட் ஷோன்' அதாவது தடை செய்யப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்டுள்ளது.