சென்னை அண்ணாசாலை பெரிய மசூதி எதிரே பிரபல தனியார் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஏராளமானோர் வந்து உணவருந்தி செல்வது வழக்கம். இந்த நிலையில், இந்த உணவகத்திற்கு 2 இளைஞர்கள் நேற்று (01-05-24) இரவு நேரத்தில் சாப்பிட வந்துள்ளனர். அப்போது ஒரு குடும்பத்தினர் அங்கு சாப்பிட வந்ததால் இருக்கை பற்றாக்குறை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இருக்கை தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டது. இருக்கை பற்றாக்குறையாக இருந்ததால், அந்த இரண்டு இளைஞர்களை வேறு இருக்கையில் அமரச் செய்யுமாறு உணவகத்தின் உரிமையாளர் கூறியுள்ளார்.
மேலும், அங்கு பணியில் இருந்த வடமாநில தொழிலாளர்கள், இளைஞர்களை வேறு இடத்தில் அமருமாறு கூறியுள்ளனர். அதற்கு அந்த இளைஞர்கள், ‘நாங்கள் அதே இருக்கையில் தான் அமர்ந்து சாப்பிடுவோம், இங்கு அமர்ந்து சாப்பிடுவதால் என்ன தவறு’ என்று கேள்வி கேட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கு வடமாநில ஊழியர்கள் தரக்குறைவான வார்த்தையில் பேசியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஓட்டல் ஊழியர்களுக்கும், இளைஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து வடமாநில தொழிலாளர்கள் ஒன்றாக சேர்ந்து சென்னையைச் சேர்ந்த அந்த இரண்டு இளைஞர்களை சமையல் கரண்டி, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவத்தை அங்குள்ளவர்கள் தங்கள் செல்போனில் வீடியோவாக எடுத்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், அந்த இரண்டு இளைஞர்களை வட மாநில தொழிலாளர்கள் கட்டையால் தாக்குகின்றனர். இதனைக் கண்ட மற்ற வாடிக்கையாளர்கள் உட்பட பொதுமக்கள் வடமாநில இளைஞரை தடுத்து நிறுத்தி உணவக உரிமையாளரிடம் இது குறித்து வாக்குவாதம் செய்கின்றனர். அப்போது, அந்த இரண்டு இளைஞர்களில் ஒருவர், ‘சாதிய பார்த்து ஹோட்டல் நடத்துறீங்களா? சாதிய பார்த்து ஏன்யா ஹோட்டல் நடத்துறீங்க’ என ஆவேசமாக கேட்கிறார். அதன் பின்னர், அந்த இளைஞர்களை அங்குள்ளவர்கள் சமாதனப்படுத்தினர். இதோடு அந்த வீடியோ முடிகிறது.
ஹோட்டலில் நடந்த தாக்குதலில் வாடிக்கையாளர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்த திருவல்லிக்கேணி காவல்துறையினர் பிரபல ஹோட்டலுக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர், வடமாநில இளைஞர்கள் மற்றும் வாடிக்கையாளரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். முதற்கட்டமாக, வழக்குப் பதிவு செய்த போலீசார், காயமடைந்த 2 பேரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
சென்னையின் முக்கியமான சாலை ஒன்றில் இயங்கிவரும் ஹோட்டலில், இளைஞர்களை, வடமாநில தொழிலாளர்கள் தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தாக்குதலுக்கு உள்ளான நபர் இருவரில் இருவர் காவலர் எனச் சொல்லப்படுகிறது.