
சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெரிய புதிய அலுவலகமாக கட்டப்பட்டது. இந்தநிலையில் வட்டாட்சியர் அலுவலகம் கட்டும்போது தரமற்ற பொருட்களைக் கொண்டு கட்டிடம் கட்டுவதாகவும், கட்டிடம் கட்டி திறப்பதற்குள் கான்கிரிட் மேல்தளகூரை பெயர்ந்து விழுந்தது. அப்போது பொதுமக்கள் மத்தியில் தரமற்ற முறையில் வட்டாட்சியர் அலுவலகம் கட்டபடுவதாக தொடர்ந்து புகார் கூறப்பட்டது.
அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒரு பொருட்டாக கண்டுகொள்ளவில்லை என்றும் மக்கள் குற்றஞ்சாட்டினர். இந்தநிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீரென மின் கம்பிகள் தீப்பற்றி எரிந்து சத்தத்துடன் வெடித்தது. இதனால் அப்போது பணியாற்றிய ஊழியர்கள் அனைவரும் வெடிகுண்டு வெடித்துவிட்டது என்று வெளியே ஓடி வந்தனர்.
பின்னர் அதற்கு தற்காலிக நடவடிக்கை எடுத்து பிரச்சனை சரி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து புதன்கிழமையன்று அக் 4ஆம் தேதி வட்டாட்சியர் அலுவலகத்தில் கான்கிரீட் மேல்தளத்தில் உள்ள சீலிங் ஃபேன் அருகே ஒயர்கள் தீப்பற்றி எரிந்து அதிக சத்தத்துடன் வெடித்து உள்ளது. இதனால் பணியில் இருந்த ஊழியர்கள் பொதுமக்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்துள்ளனர்.

பின்னர் மின் வயர் தீப்பிடித்து எரிந்தது தெரியவந்தது. அதன்பிறகு அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இருந்தும் உயிர் பயத்துடன்தான் ஊழியர்கள், பொதுமக்கள் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.
சிதம்பரம் புதிய வட்டாட்சியர் அலுவலகம் கட்டியது முதல் பல்வேறு முறைகேடுகள் மற்றும் தரமற்ற பொருட்களைக் கொண்டு வட்டாட்சியர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது என ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கூறப்படுகிறது. இதற்கு தனிவிசாரணை குழு அமைத்து நேர்மையான முறையில் விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் அரசை வலியுறுத்தியுள்ளனர்.