அமெரிக்க வாழ் இந்தியரான நந்திகா தேவராஜன் பழங்குடியினர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக பீட்ஸ் டு ட்ரீம்ஸ் என்ற பிரத்தியேக அமைப்பு ஒன்று தொடங்கி நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் மூலம் நந்திகா தேவராஜன் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்தியாவின் கிராமப்புற சமூகங்களில் உள்ள மாணவர்களுக்கு அவர் உருவாக்கிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் ஆங்கிலத்தில் தகவல் தொடர்பு திறன்களைக் கற்றுக்கொள்ள வாய்ப்பு இல்லாத கிராமப்புற பெண்களைத் தேடிச்சென்று கற்பித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த அமைப்பின் மூலம் பெரம்பலூர் மாவட்டம் எறையூர் நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த பழங்குடியின மாணவி ஹரிணி பயனாளியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் பெரம்பலூர் சாரதா மகளிர் கல்லூரியில் பி.ஏ., ஆங்கிலம் முதலாம் ஆண்டு, பயின்று வருகிறார். இவருக்குக் கல்வி உதவித்தொகையாக ரூ 6 ஆயிரத்து 500 அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் இராம. கதிரேசன் வழங்கினார்.
இந்நிகழ்வில் அண்ணாமலை பல்கலைக்கழக தகவல் மற்றும் கணினி அறிவியல் துறையைச் சார்ந்த உதவி பேராசிரியர் ஜெய்பிரகாஷ் ஜி.பரதன், அறிவியல் மற்றும் கணினித் துறைத்தலைவர் அரவிந்த் பாபு, பீட்ஸ் டு ட்ரீம்ஸின் நிறுவனர் தலைவர் நந்திகா தேவராஜன் மற்றும் பழங்குடி இன நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை கலந்துகொண்டார். இந்த நிகழ்வினை பீட்ஸ் டு ட்ரீம்ஸின் அலுவலர் லாவண்யா ஏற்பாடு செய்திருந்தார். இதேபோன்று இந்த ஆண்டில் பழங்குடியின மாணவிகள் 40-க்கும் மேற்பட்டவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.