
அ.தி.மு.க. உட்கட்சி மோதலை மறைக்க தேவையின்றி அரசின் மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சுமத்துவதாக அமைச்சர் எ.வ.வேலு விமர்சித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் அடைந்த விவகாரத்தில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை மறந்து விட்டு, எடப்பாடி பழனிசாமி, அரசை வசைப்படுவதாக அறிக்கையில் அமைச்சர் எ.வ.வேலு குறிப்பிட்டுள்ளார். மாணவியின் பெற்றோரை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தித்து ஆறுதல் கூறி விசாரணை பாரபட்சமின்றி நடைபெறும் என உறுதியளித்ததாக தனது அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
அமைதியாக நடந்த போராட்டத்தில் எங்கிருந்தோ தூண்டிவிடப்பட்ட விஷமிகள் விரும்பத் தகாத நிகழ்வுகளில் ஈடுபட்டதாகக் கூறியுள்ள அமைச்சர், முதலமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கைகளால் அங்கு அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தை விட சட்டம் ஒழுங்கை சிறப்பாக பேணிக்காத்து வரும் முதலமைச்சரைக் குறைக்கூற எடப்பாடி பழனிசாமிக்கு தார்மீக உரிமையில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மாணவியின் மரணம் தொடர்பான சி.பி.சி.ஐ.டி. விசாரணையின் அடிப்படையில், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; போராட்டத்தின்போது கலவரத்தைத் தூண்டியவர்களுக்கும் தக்க தண்டனை பெற்றுத் தரப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.