
தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் 3 மாத கைக் குழந்தையை தாய் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள அம்பிகாநகரைச் சேர்ந்தவர் 22 வயதான கரிஷ்மா பாகல். இவருக்கு திலிப் என்பவரோடு திருமணம் நடைபெற்று கடந்த மூன்று மாதங்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு காயல் என்ற பெயர் வைக்கப்பட்டது.
இந்த நிலையில், தனது குழந்தையை அறையில் விட்டுவிட்டு குளியலறைக்குச் சென்ற போது குழந்தை காணாமல் போய்விட்டதாக கரிஷ்மா பாகல் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், போலீசா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது கரீஷ்மா வீட்டு அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் குழந்தை காயலின் உடல் மிதந்து கொண்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். யாரோ ஒருவர், குழந்தையை தண்ணீர் தொட்டியில் போட்டு கொலை செய்திருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் பேரில், போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது தாய் கரிஷ்மா முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதில் சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். கரிஷ்மா கர்ப்பமானதில் இருந்து மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். சில உடல்நலப் பிரச்சனைகள் குறித்து அடிக்கடி புகார் கூறி வந்துள்ளார். தனது குழந்தை அதிகமாக அழுவதால் தான் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த கரிஷ்மா, தனது 3 மாத குழந்தையை தண்ணீர் தொட்டியில் போட்டு கொலை செய்திருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்தது. இதையடுத்து, கரிஷ்மாவின் கணவர் திலிப் கொடுத்த புகாரின் அடிப்படையில் கரிஷ்மாவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.