சென்னை சவுக்கார் பேட்டை பகுதியில் இயங்கி வரும் 6 பிரபல நகைக் கடைகளில் அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். அதில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளது தெரியவந்தது. இந்நிலையில் அந்த நகைக் கடைகளுடன் வணிக ரீதியாகத் தொடர்பில் இருக்கும் நகைக் கடைகளில், இன்று அமலாக்கத்துறை மற்றும் வணிகவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், திருச்சி பெரிய கடை வீதி, சின்னக் கடை வீதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட நகைக் கடைகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட நகை பட்டறைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது. அதில் உரிய ரசீது இல்லாமல், நகைகளை விற்பனை செய்வதும், வாங்குவதும், பெறப்படும் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் முறையான பராமரிப்பின்றி கணக்கீடு செய்யப்பட்டுள்ளதாக எழுந்த புகாரையடுத்து திருச்சியில் ஜாபர்ஷா தெருவில் உள்ள ரூபி ஜுவல்லரி, விக்னேஷ் ஜுவல்லரி, சூர்யா ஜுவல்லரி, சக்ரா ஜெயின் ஜுவல்லரி என 4 பிரபல நகைக் கடைகளில் அமலாக்கத்துறையினர் மற்றும் வருமான வரித்துறையினர் என 20க்கும் மேற்பட்ட அதிகாரிகளும், 10க்கும் மேற்பட்ட மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரிகளின் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த சோதனையில் நகைக் கடைகள் தங்கத்தை கட்டிகளாக மொத்தமாக வாங்கியதில் பல கோடி ரூபாய் மதிப்பில் வரி ஏய்ப்பு நடந்துள்ளது அதிகாரிகளுக்குத் தெரியவந்தது. மேலும் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.