Skip to main content

விஜயபாஸ்கரை கலாய்த்த துரைமுருகன்; சிரிப்பலையில் சட்டசபை

Published on 01/04/2023 | Edited on 01/04/2023

 

Durai murugan and Vijayabaskar conversion in assembly

 

தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில், கேள்வி நேரத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், “அமைச்சர் கொடுத்த விவர அறிக்கையைப் படித்து பார்த்தேன். அதில் 2023 - 2024 நிதி ஆண்டுக்கு நில எடுப்புப் பணிக்கு 554 கோடி ரூபாயும், கால்வாய்ப் பணிக்கு 111 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிதி குறித்து நிதி அமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டிலோ அல்லது மானியக் கோரிக்கையிலோ விவரங்கள் இல்லை. அதன் காரணமாக இந்த நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்ட ரூ. 700 கோடிக்குள்ளானது என்பதை அமைச்சரிடத்தில் அறிய விரும்புகிறேன். 

 

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் முதல் அனைத்து முதலமைச்சர்களும், காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டம் குறித்து கனவு கண்டனர். அனைத்து முதல்வர்களும் நிறைவேற்ற எண்ணிய சிறப்பான திட்டம். ஆனால், இந்தத் திட்டத்தை முதன் முதலாக ரூ. 14 ஆயிரம் கோடி அளவுக்கு எஸ்டிமேட் செய்து, 6,941 கோடி ரூபாயை நிர்வாக ஒப்புதலுக்கான அரசாணையை வழங்கி ரூ 700 கோடியை பட்ஜெட்டில் ஒதுக்கி, 331 கோடி ரூபாயை இரண்டு தவணையாக டெண்டர் விட்டு, மிக சிறப்பாக 100 பொக்லைன் வாகனங்களை வைத்து விவசாயிகளின் மத்தியிலேயே விவசாயிகளின் வாழ்த்துகளோடு கரகோஷங்களோடு ஒரு எளிய விவசாயி குடும்பத்தில் பிறந்த இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராகவும் அன்றைய முதலமைச்சராகவும் இருந்த எடப்பாடி இந்த வரலாற்று சிறப்பு மிக்கத் திட்டத்தை நிறைவேற்றி தொடங்கி வைத்தார். 

 

நான் அமைச்சரை, வாருங்கள் ஆறு வெட்டப்படுவதை பாருங்கள். தாராளமாக நிதியை தாருங்கள் என்று அன்போடு அழைக்கிறேன். காரணம் என்னவென்றால் இந்தத் திட்டத்தில் நிலம் எடுக்கும் பணிகளும், கால்வாய் வெட்டும் பணிகளும் மந்தமாக நடந்து வருகிறது. அதன் காரணமாக நீங்கள் நேரடியாக ஆய்வு செய்து சிறப்பு நிதியை ஒதுக்க வேண்டும். நெல்லும், வாழையும், கரும்பும் பார்க்கின்றபோது எங்களை போன்ற புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்தவர்களுக்கும் விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டத்தை சார்ந்தவர்களுக்கும் ‘இதுபோல் நம் மாவட்டத்தில் எப்போது விளையும்’ என ஏக்கமாக இருக்கும். நீண்ட காலம் நீர்வளத்துறையை நிர்வகித்தவர், அவருக்கு நீரின் வாசனையும் மண்ணின் வாசனையும் விவசாயிகளின் கஷ்டத்தின் வாசனையும் தெரியும். எப்படி திட்டத்தை துவங்கி வைத்து வரலாற்றில் இடம்பெற்றாரோ எடப்பாடி, அதுபோல் நிதி வழங்கி நீங்களும் வரலாற்றில் இடம் பெறவேண்டும்” என்றார். 

 

அப்போது சபாநாயகர் குறுக்கிட்டு, “போதுமே..” என்றார். அதற்கு விஜயபாஸ்கர், “ஒரு நிமிடம்” என்று சொல்லிவிட்டு மீண்டும், “எம்.ஜி.ஆர். அழகாக பாடியிருக்கிறார். ‘நதியைப் போல் நாமும் நடந்து பயன் தரவேண்டும். கடலை போல விரிந்து பரந்த இதயம் வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார். அந்த விரிந்த இதயத்தோடு நீங்கள் நிதியை தாருங்கள். நில வளம் இருக்கிறது; நீர்வளம் இருக்கிறது; அரசின் மனவளம் இன்னும் சிறப்பாக ஒத்துழைத்தால் எங்கள் மண் வளம் சிறக்கும் என ஏழு மாவட்ட விவசாயிகளின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். எனவே மூத்த அமைச்சர் நீர்வளத்துறை அமைச்சர் இந்த வரலாற்றில் நீங்கள் இடம்பெற்று விவசாயிகளின் கண்ணீரை துடைக்க வேண்டும். வாடிய பயிரை காணுகின்ற போதெல்லாம் வாடிய வள்ளலார் போல்.. நீங்கள் நிதியை தந்து திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்” என்றார். 

 

இதற்கு பதில் அளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயபாஸ்கரின் வேகமான பேச்சைக் கேட்டேன். அவர் அமைச்சராக இருக்கும்போது இதுபோன்ற கேள்விகள் எல்லாம் வரும். ஆனா, ரொம்ப கெட்டிக்காரத்தனமா பேசுவார். என்னமோ இந்தத் திட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர் தான் கொண்டு வந்தது போலவும், வேறு யாரும் அது குறித்து சிந்திக்காததைப் போலவும்.. அட அட அட அட” என்றார். அப்போது எதிர்க்கட்சி தரப்பிலிருந்து நாங்களும் இந்தத் திட்டத்தை முன்னெடுத்தோம் என்றனர். 

 

அதற்கு அமைச்சர் துரைமுருகன், “நீங்க செய்யவில்லை என்று நான் சொல்லவில்லை. நீங்கள் மட்டுமே செய்தது போல் சொல்கிறாரே அதற்கு தான் சொல்கிறேன். உண்மையில் இந்தத் திட்டம் என்பது, தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம் மகாநதியையும் குண்டாறுவையும் இணைக்கத் திட்டம் போட்டனர். அது மிகவும் கடினம் என்று எண்ணி பிறகு மகாநதியையும் கோதாவரியையும் இணைப்பது பிறகு கோதாவரியிலிருந்து குண்டாறுவை இணைப்பது என்று முடிவெடுத்தனர். இந்தத் திட்டம் வரும்போது தலைவர் கலைஞர், ‘இது ஒரு நல்லத் திட்டம் அது வரும்போது வரட்டும். ஆனால், காவிரி - குண்டாறு இணைப்பதை நாம் செய்வோம்’ என முதல்முதலாக நினைத்து அதற்காக மாயனூரில் ரூ. 165 கோடி ஒதுக்கி கதவணையை கட்டி, அங்கிருந்து குண்டாறுக்கு தண்ணியை எடுத்துச் செல்ல வழி செய்தவர் கலைஞர். கட்டியவன் அடியேன் துரைமுருகன்” என்றார்.

 

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, “தாமிரபரணி ஆறு, நம்பியாறு, கருமணியாறு ஆகிய நதிநீர் இணைப்பு திட்டமும் இதனுடன் சேர்த்துதான் அறிவித்தது” என்றார்.

 

அதற்கு அமைச்சர் துரைமுருகன், “நம்ம சபாநாயகருக்கு எதுவாக இருந்தாலும், அவாள் ஊரையும் சொல்வார்” என்று சொல்லிவிட்டு தொடர்ந்து பேசினார். “இதற்கு 9.5.2008- ல் கலைஞர் ஆணையிட்டார். 9.2.2009-ல் வேலையைத் துவக்கினோம். அதன்பிறகு நீங்கள் வந்தீர்கள், அப்போது ரூ 254 கோடியாக உயர்ந்தது. அதை கட்டி முடித்துவிட்டோம். நீங்களும் சரி, நாங்களும் சரி எதுவாக இருந்தாலும், காவிரி குண்டாறு இணைப்பதுதான் சரியாக இருக்குமென்று இதனை செய்தோம்” என்று மேலும் அந்தத் திட்டம் குறித்து விவரித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விராலிமலையில் ஜல்லிக்கட்டு; விஜயபாஸ்கர் தலைமையில் நடப்பட்ட முகூர்த்தக்கால்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Muhurthakaal planting program for jallikattu competition at Viralimalai

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவில் உள்ளது. இங்கு வருடந்தோறும் சித்திரை மாத திருவிழாவானது வெகு விமரிசையாக நடைபெறும். அதனையொட்டி ஜல்லிக்கட்டு போட்டியானது திருவிழாவிற்கு முன்பு நடைபெறும் பூச்சொரிதல் விழா அன்று வெகு விமர்சியாக நடைபெறும். ஆனால் இந்தமுறை தேர்தல் விதிமுறைகளின் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி இல்லாமல் இருந்தது. அதனால் ஜல்லிக்கட்டு போட்டியின்றி  பூச்சொரிதல் விழா மட்டும் நடைபெற்றது.

தற்போது தேர்தல் முடிவடைந்ததையடுத்து ஜல்லிக்கட்டு கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உத்தரவு கிடைத்ததையடுத்து  வருகின்ற 30-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதனையடுத்து அதற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியானது முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது.

அதில் ஜல்லிக்கட்டு திடலில் உள்ள முகூர்த்தக் காலுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் செய்து நடப்பட்டது. இதில் விழா கமிட்டியினர், சர்வகட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பேரிகார்டு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கான அரசாணையை உடனடியாகப் பெற்றுத்தந்த விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு கமிட்டி நிர்வாகிகள், சர்வகட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Next Story

பா.ம.க பரப்புரையில் திடீர் எண்ட்ரி கொடுத்த அமைச்சர் துரைமுருகன்; அடுத்தடுத்து நடந்த சுவாரஸ்ய சம்பவம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Minister Durai Murugan who made a sudden entry in the BMC lobbying

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன. 

அதில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பா.ம.க, த.மா.க, அ.ம.மு.க உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதே போல், திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க, கம்யூனிஸ்ட், இந்தியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்று, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், அரசியல் களம் மிகவும் சூடுபிடித்துள்ளது. இதற்கிடையே, பிரச்சாரக் களத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இந்த நிலையில், பா.ஜ.க தலைமையிலான பா.ம.க கட்சிக்கு, வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வள்ளிமலை பகுதியில் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியை ஒதிக்கியுள்ளது. இந்த மக்களவைத் தொகுதியில், பா.ம.க வேட்பாளராக பாலு களமிறங்கி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், பா.ம.க வேட்பாளர் பாலு பிரச்சாரம் செய்த போது, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவ்வழியே வந்த போது அங்கு சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பா.ம.க வேட்பாளர் பாலு, அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் இன்று (15-04-24) தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அதே தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சனை ஆதரித்து பரப்புரை செய்து முடித்துவிட்டு, பா.ம.க வேட்பாளர் பரப்புரை செய்த அந்த வழியாக வந்தார். அப்போது, அமைச்சர் துரைமுருகனை பார்த்த பா.ம.க வேட்பாளர் பாலு, “எனக்கு முருகன் அருள் கிடைத்திருக்கிறது. அண்ணன் துரைமுருகனின் அன்பான ஆசிர்வாதமும், அருளும் என்னை வெற்றிபெற வைக்க வேண்டும். என்று கூறிவர், உங்கள் வாழ்த்தை நான் அடிபணிந்து ஏற்றுக்கொள்கிறேன் எனக் கூறினார். 

மேலும், நான் நிச்சயமாக வெற்றி பெற்று விடுவேன். இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றதும், உங்களை நேரில் வந்து சந்தித்து என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பேசினார். அதற்கு அமைச்சர் துரைமுருகனும், முகம் சுளிக்காமல் சிரித்துக்கொண்டே சென்றார். இதனால், அப்பகுதியில் கலகலப்பான சூழல் ஏற்பட்டது.