தமிழகத்தில் திமுக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்று கொண்டதை அடுத்து பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தொடர்ச்சியாக இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதே போல் தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் ''எக்காரணத்தைக் கொண்டும் பள்ளிக் கல்வித் துறையினர் தாம் எழுதிய நூல்களை வாங்க வேண்டாம்'' என்று தலைமைச் செயலாளர் இறையன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பள்ளிக்கல்வித்துறைக்கு எழுதியுள்ள கடிதத்தில் ''தலைமைச் செயலாளராக தான் பணியாற்றும் வரை தனது நூல்களை எந்த காரணம் கொண்டும் எந்த அழுத்தம் வர பெற்றாலும், எந்தத் திட்டத்தின் கீழும் வாங்க கூடாது. தான் வகிக்கும் பதவியின் காரணமாக திணிக்கப்பட்டு இருப்பதாக பார்ப்பவர்களுக்கு தோன்றி களங்கம் விளைவிக்கும். எந்த வகையிலும் தன் பெயரையோ, பதவியையோ தவறாக பயன்படுத்தக் கூடாது என்பதே தனது நோக்கம். அரசு விழாக்களில் பூங்கொத்துக்கு பதில் புத்தகங்கள் வழங்கினால் நன்று என்ற அரசாணை 2006-ல் பிறப்பிக்கப்பட்டது. எனவே அரசு விழாக்களில் அரசு அலுவலர்கள் என்னை மகிழ்விப்பதாக எண்ணி எனது நூல்களை அரசு செலவிலோ அல்லது சொந்த செலவிலோ உபயோகிக்காதீர்கள். இந்த வேண்டுகோள் மீறப்பட்டால் அரசு செலவாக இருந்தால் தொடர்புடைய அதிகாரிகளிடம் வசூலிக்கப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்படும். இத்தகைய சூழலை எக்காரணம் கொண்டும் ஏற்படுத்த வேண்டாம்'' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.