திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஜெ.அன்பழகனின் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை மருத்துவரிடம் தமிழக முதல்வர் பழனிசாமி தொலைபேசி மூலம் கேட்டறிந்தார். அதன் தொடர்ச்சியாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அன்பழகன் சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். மேலும் அன்பழகனுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அந்த தனியார் மருத்துவமனை மருத்துவர் முகமது ரேலா, "ஜெ.அன்பழகன் எம்எல்ஏ உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம். வெண்டிலேட்டர் மூலம் ஆக்சிஜன் தேவை 90% ஆக இருந்த நிலையில் 45% ஆக குறைந்துள்ளது. அரசு சார்பில் உதவ தயார் என முதல்வர் கூறியுள்ளார்." இவ்வாறு மருத்துவர் கூறினார்.