கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பலரும் பயனுள்ள வேலைகளை செய்து வந்தாலும் இளைஞர்கள், மாணவர்கள் செல்ஃபோன்களில் மூழ்கிக் கிடக்கின்றனர். கேம்ஸ்கள் அவர்களை கட்டிப் போட்டு வைத்துள்ளது. இப்படி செல்ஃபோன்களில் மூழ்கியுள்ள இளைஞர்களை மீட்பதே பெரிய கடினமான செயலாக கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இந்நிலையில்தான் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் செல்ஃபோன் கடை நடத்தி வரும் செம்பாளூர் கிழக்கு கிராமத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான சதீஷ்குமார் (31). தனது கிராம இளைஞர்கள் மாணவர்கள் செல்ஃபோனில் மூழ்கி வாழ்க்கையை வீணாக்கிவிடக் கூடாது என்பதற்காக வீடு வீடாக சென்று பொது அறிவு, அரசியல், வரலாறு, போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள், இலக்கியம், நாவல், சிறுகதைகள் என பல்வேறு வகையான புத்தகங்களை கொடுத்து ஊரடங்கு காலத்தில் நிறைய படியுங்கள் என்று ஊக்கப்படுத்தி வருகிறார்.
இதுகுறித்து சதீஷ்குமார் நம்மிடம் கூறும்போது, ''நான் கல்லூரியில் படிக்கும் போதே புத்தகஙகள் மீது அதிக ஆசை உண்டு. நிறைய புத்தகங்கள் வாங்கி படித்தேன். அந்த புத்தகங்களை வீட்டிலேயே வைத்திருந்தேன். சென்னை போனால் நிறைய புத்தகங்கள் வாங்கி வருவேன். இப்படி வாங்கி வந்த புத்தங்களை எங்கள் வீட்டு மாடியில் "செம்மொழி வாசிப்பகம்" என்ற பெயரில் தனி நூலகமாக அமைத்தேன். புத்தகம் வாசிப்பதில் ஆர்வமுள்ள பலர் என் நூலகத்திற்கு வந்தார்கள். நிறைய புத்தம் படித்தார்கள் பல இளைஞர்கள் போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் கேட்டார்கள் வாங்கி வைத்திருக்கிறேன். இதையறிந்த சில நண்பர்களும் போட்டித் தேரவுகளுக்கான புத்தகங்கள் வாங்கித்தர முன்வந்துள்ளனர்.
தற்போது கரோனா பரவலை தடுக்க அரசு ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் பலர் செல்ஃபோன்களில் மூழ்கி கேம்ஸ் விளையாடி நேரத்தையும் வீணடிக்கிறார்கள். மேலும் பலர் உறவுகள், பசியை கூட மறந்து விளையாடுகிறார்கள். இவர்களை செல்ஃபோன்களில் இருந்து மீட்க வீடு வீடாகச் சென்று புத்தகங்களை கொடுத்து படிக்கச் சொல்கிறேன். ஆர்வமாக புத்தகங்களை வாங்கி படிக்கிறார்கள். அடுத்து கரோனா ஊரடங்கு முடிந்த பிறகு படித்த இளைஞர்களுக்கு உள்ளூர் இளைஞர்களை வைத்தே போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளையும் நடத்த திட்டமிட்டுள்ளேன். மேலும் மாணவர் சேர்க்கை இல்லாத அரசுப் பள்ளிகளை மீட்க இளைஞர்கள் பொதுமக்களிடம் பேசிவருகிறேன்'' என்றார்.