
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும். தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் 2,000 கோடி ரூபாயைத் தரச் சட்டத்தில் இடம் இல்லை. அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு எதிர்க்கிறது. உள்ளூர் மொழிக்கு முதலிடம் என்ற தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு ஏற்கிறதா இல்லையா?. ஏற்றால் தான் நிதி” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். இவரது பேச்சுக்குத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் புதிய கல்விக் கொள்கையை ஏற்கவில்லை என்றால் 5000 கோடி ரூபாயை தமிழகம் இழக்க நேரிடும் என மத்திய அமைச்சர் கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'புதிய கல்வி கொள்கையை ஏற்காவில் நிதியை இழக்க நேரிடும் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ரூபாய் 5000 கோடியை தமிழகம் இழக்க நேரிடும் என மத்திய அமைச்சர் கூறுவது கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசோடு மத்திய அரசு கலந்து ஆலோசித்து ஒரு சமூக முடிவு எட்டப்பட வேண்டும்.
திடீரென நிதியை இழப்பதால் மாணவர்களும், ஆசிரியர்களும் பெரிதும் பாதிக்கப்படுவர். மும்மொழிக் கொள்கை இந்த காலத்திலும் தமிழ்நாட்டுக்கு தேவையற்றது. அதிமுக மும்மொழி கொள்கையும் எதிர்க்கிறது. மத்திய அரசு மும்மொழிக் கொள்கை திணிப்பைக் கைவிட வேண்டும். இதில் திமுக அரசு பயனற்ற விவாதம் செய்வதை தவிர்த்து மத்திய அரசிடம் வலியுறுத்தி மக்கள் நலன் சார்ந்த நல்ல முடிவை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.