சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுகவின் செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி, "அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும் எனக் கூறியவர் ஸ்டாலின். 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் கீழ் தொலைபேசி மூலம் வந்த கோரிக்கைகளுக்கு திமுக உதவி வருகிறது. ஒன்றிணைவோம் வா திட்டம் மட்டுமின்றி அவரவர் பகுதிகளில் திமுக நிர்வாகிகள் உதவி செய்துள்ளனர். பொதுமுடக்கம் தொடங்கிய காலத்தில் அதிமுக அரசு ஒன்றும் செய்யவில்லை. திமுகவிடம் மக்கள் அளித்த மனுக்களை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் குழு, தலைமை செயலாளரிடம் அளித்தது. பொது முடக்கத்தால் பசி, பட்டினி வராமல் இருக்க செய்ய வேண்டியது பற்றி பேசவே அனைத்துக் கட்சி கூட்டத்தை திமுக கோரியது.
மக்களின் குறைகளை அரசுக்கு தெரிவிப்பதில் அரசியல் செய்யும் நோக்கம் திமுகவுக்கு இல்லை. மக்களின் குறைகளை அரசுக்கு தெரிவித்த திமுகவின் முயற்சியை வரவேற்றிருக்க வேண்டும். எல்லாவற்றையும் செய்துவிட்டோம் என அமைச்சர் பேசுகிறார், அப்படி எனில் ஒரு லட்சம் மனுக்கள் வந்தது எப்படி? சில இடங்களில் அரசு உதவி செய்யாததால் திமுகவை மக்கள் அணுகுகிறார்கள். உணவு, உடை அளித்ததாக அரசு கூறுகிறது, உடை தர வேண்டிய நேரம் இதுவல்ல; உணவு தர வேண்டிய நேரம் இது.
தமிழகத்தில் 2 கோடி பேர் அன்றாட வருவாய் இழந்து தவிக்கிறார்கள். குறை சொல்லும் நோக்கத்துடன் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பேசியுள்ளார். குறைகள் இருப்பதை சுட்டிக்காட்டுவதுதான் எதிர்க்கட்சி, அதையும் செய்யக்கூடாது என்றால் எப்படி? திமுகவை குறை சொல்ல வேண்டும் என்ற ஒற்றைக் காரணத்துடன் அமைச்சர் காமராஜ் பேசியுள்ளார்.
அரசு ஒன்றுமே செய்யவில்லை எனக் கூறவில்லை, முறையாக செய்யவில்லை என்றே சொல்கிறோம். அரசு நடத்தும் அம்மா உணவகத்தில் யாருடைய பணத்தில் அதிமுகவினர் உணவு தருவார்கள்? அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்க எல்லா கட்சிகளையும் நிதியுதவி தர ஏன் அனுமதிக்கவில்லை? பொதுமுடக்கம் தொடங்கியதில் இருந்தே அதிமுக அரசுதான் அரசியல் செய்து வருகிறது. அதிமுக ஆட்சியாளர்களுக்கு அரசியலமைப்பு சட்டம் கூடத் தெரியவில்லை. அரசு டாஸ்மாக் கடைகளை மூடினால், திமுகவினர் தானாக மது ஆலைகளை மூடப்போகிறார்கள்." இவ்வாறு டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி.பேசினார்