கோவை மற்றும் திருக்கோவிலூரில் உள்ள பெரியார் சிலையை அவ மதித்தவர்களைக் கைது செய்யக் கோரி திராவிடர் கழகத்தின் சார்பில் நெய்வேலி என்.எல்.சி.ஆர்ச் கேட் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை சுந்தராபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பெரியாரின் சிலையில் நேற்று (ஜூலை 17) அதிகாலை காவி நிறச் சாயம் பூசப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையறிந்த திராவிடர் கழகத்தினர் மற்றும் பல்வேறு கட்சியினர் அங்கு திரண்டனர். காவல்துறையினரும் அங்கு குவிக்கப்பட்டனர். பின்னர் சிலையில் இருந்த காவிச் சாயம் அழிக்கப்பட்டு, சிலை சீர்படுத்தப்பட்டது.
இதனிடையே திருக்கோவிலூர் அருகேயுள்ள கீழையூரில் நேற்று (ஜூலை 17) பிற்பகல் மர்ம நபர்கள் சிலர் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து அவமதித்துள்ளனர். யார் இச்செயலில் ஈடுபட்டனர் என்று காவல்துறை விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ச்சியாக நடைபெறும் இச்செயல்களைக் கண்டித்து நெய்வேலி என்.எல்.சி.ஆர்ச் கேட் எதிரே திராவிடர் கழகத்தினர், மாநிலச் செயலாளர் துரை சந்திரசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாவட்ட அமைப்பாளர் மணிவேல், தலைவர் தண்டபா புலவர் ராவணன், இளைஞரணிச் செயலாளர் வேலு, மாணிக்கவேல், பெரியார் வீர விளையாட்டுக் கழக மாவட்டச் செயலாளர் மாணிக்கவேல், ஒன்றிய தலைவர் கனகவேல், கிளைச் செயலாளர் கண்ணன், தலைவர் பாஸ்கர் உள்ளிட்ட 11 பேரும் கைது செய்யப்பட்டு பின் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து பெரியார் சிலை அவமதிக்கப்படுவது பற்றி இன்று காலை ட்வீட் செய்த காங். எம்.பி ராகுல் காந்தி, “எவ்வளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனைக் களங்கப்படுத்த முடியாது” என்று கூறி தேசிய அளவில் பெரியார் குறித்த பேச்சினை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது