தமிழக ஆளுநர் மீது தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், நேற்று தமிழக ஆளுநர் பத்துக்கும் மேற்பட்ட நிலுவையில் உள்ள மசோதாக்களை மீண்டும் தலைமைச் செயலகத்திற்குத் திருப்பி அனுப்பியுள்ளார். ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்குத் தொடர்பான மசோதா; மருத்துவ பல்கலைக்கழக திருத்த மசோதா; வேளாண் பல்கலைக்கழக திருத்த மசோதா; சென்னை பல்கலைக்கழக திருத்த மசோதா; சட்டப் பல்கலைக்கழகத் திருத்த மசோதா; அன்னை தெரசா பல்கலைக்கழக திருத்த மசோதா; மீன்வளம், கால்நடை பல்கலைக்கழக திருத்த மசோதா; தமிழ்ப் பல்கலைக்கழக திருத்த மசோதா; அண்ணாமலை பல்கலைக்கழக திருத்த மசோதா; பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சரே செயல்பட வகை செய்யும் மசோதா ஆகியவை திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆளுநரின் இந்தச் செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தி.க தலைவர் கி.வீரமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு அரசியலமைப்பு நெறிமுறைகள் மற்றும் மக்களாட்சி மாண்புகளை அவமதித்து வருகிறது. ஆட்சி பொறுப்பில் அமர்த்திய வாக்காளர்களை வெளிப்படையாக அவமதித்து வருகிறது. தவறான வழியில் ஆளுநர்களின் சட்ட விரோத நடவடிக்கைகளை மறைமுகமாக மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்ட ஆளுநர் அரசின் கொள்கைகளுக்கு எதிராக செயல்படுகிறார். ஆனால், தமிழக அரசு பொறுமையை கடைபிடித்து வருகிறது. மேலும், மோதல் போக்கால் ஆளுமை பாதிக்கப்படக் கூடாது என பெருந்தன்மையாக நடந்து கொண்டிருக்கிறது.
கடைசியாக பொறுமை இழந்த தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்று நீதி கேட்டு ஆளுநருக்கு எதிராக வழக்கு போட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு வந்த பிறகே தமிழக அரசு அனுப்பியுள்ள 10 மசோதாக்களை வேறு வழியின்றி மீண்டும் திருப்பி அனுப்பியுள்ளார். ஏன் இந்த தேவையற்ற அரசியல் கண்ணாமூச்சி? இப்போது தனது மூர்க்க பிடிவாதத்தை காட்டி உச்சநீதிமன்றத்தையே அவமதிக்க போகிறாரா ஆளுநர் ஆர்.என்.ரவி? 2024ஆம் ஆண்டு பொது தேர்தல் தான் ஒரே தீர்வு என்பதை வெகுமக்களுக்கு புரிய வைப்பதே முன்னுரிமை பணி” என்று தெரிவித்துள்ளார்.