'அதிமுகவின் என்னென்ன புரட்சி வெடிக்கப் போகிறது, என்னென்ன கூத்து அரங்கேற்றப்பட இருக்கிறது என்பதை பொறுத்து பாருங்கள்' என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், ''தனித்து வெல்வோம் என்று சொன்னவர்கள் (பாஜக) இன்றைக்கு தனித்து விடப்பட்டிருக்கிறார்கள். கூட்டணியின் தயவு இல்லாமல் ஆட்சி நடத்த முடியாது என்கிற சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். நிச்சயமாக இது நிலைத்து நிற்கும் ஆட்சியாக இருக்காது என்பது அரசியல் வல்லுநர்களின் கருத்தாக அமைந்திருக்கிறது. இந்தியா கூட்டணிக்குக் கிடைத்திருக்கிற வெற்றி என்பது மகத்தான வெற்றியாகும். ஏனென்று சொன்னால் 400 இடங்களுகளில் வருவோம் என்று சொன்னவர்கள் 239 இடங்களில் அமுக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் இன்றைக்கு எங்களுடைய கூட்டணி சிறப்பான எதிர்கட்சியாக பணியாற்றக்கூடிய அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது. எனவே இந்தியா கூட்டணியின் இந்த வெற்றியைக் கொண்டாடுவது எந்தவிதமான தவறும் கிடையாது. அது மகிழ்ச்சியான ஒன்று தான். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முதலமைச்சர் 40க்கு 40 என்று என தேர்தல் காளத்தில் ஆரம்பித்தார். சொன்னபடி தேர்தலில் 40க்கு 40 என்ற சபதத்தை நிறைவேற்றி இருக்கிறோம்'' என்றார்.
'அதிமுகவை பற்றி பேச திமுகவிற்கு தகுதி இல்லை' என எடப்பாடி பழனிச்சாமி கூறியது தொடர்பான கேள்விக்கு, பதிலளித்த அமைச்சர் ரகுபதி, ''எடப்பாடி பழனிசாமி அதிமுகவினுடைய பொதுச்செயலாளர். ஆனால் அந்த கட்சிக்குள் என்னென்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது அவருக்கு நன்றாக தெரியும். நாங்கள் அதிமுகவை பற்றி விமர்சிக்கவில்லை. ஆனால் திமுகவை பற்றி பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தகுதி இருக்கிறது. திமுகவைப் பற்றி விமர்சிப்பதற்கு, தமிழக முதல்வரை பற்றி விமர்சிப்பதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி இருக்கிறது என்று சொன்னால், அதிமுகவை பற்றி பேசுவதற்கு ரகுபதிக்கு தகுதி உண்டு. பொறுத்திருந்து பாருங்கள். அங்கு என்னென்ன கூத்துகள் நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள். என்னென்ன புரட்சி வெடிக்கப் போகிறது, என்னென்ன கூத்து அரங்கேற்றப்பட இருக்கிறது என்பதை பொறுத்து பாருங்கள்'' என்றார்.