கடலூர் மாவட்டத்தில் 100- க்கும் மேற்பட்ட ஜே.சி.பி. எனப்படும் மண் அள்ளும் இயந்திரங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் டீசல் விலை உயர்வாலும், ஜே.சி.பி. இயந்திரங்களின் உதிரி பாகங்கள் மற்றும் ஆயில் விலை ஏற்றத்தாலும், வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதித்துள்ள ஜே.சி.பி. இயந்திர உரிமையாளர்கள் விருத்தாச்சலத்தில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு லிட்டர் டீசல் விலை 95.44 பைசா விற்பனையாகி வரும் நிலையில், தற்போது ஒரு மணி நேர வாடகைக்கு ஜே.சி.பி இயந்திரம் இயக்கப்படும் போது 6 முதல் 7 லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. ஒரு மணி நேர வாடகையான 1,100 ரூபாயை வைத்து கணக்கிட்டு பார்த்தால், வாடகை பணத்தில் பாதி டீசல் மற்றும் ஆயிலுக்கே செலவாவதாகவும், ஓட்டுனர் கூலி, தேய்மானம் என அனைத்தும் செலவுகளையும் பார்க்கும் போது உரிமையாளர்களுக்கு எதுவும் மிஞ்சவில்லை என்று கூறுகின்றனர்.
மேலும் ஜேசிபி இயந்திரத்தில் 2000- க்கும் மேற்பட்ட உதிரிபாகங்கள் உள்ளதால், வருடத்திற்கு இரண்டு முறை பாராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு பராமரிப்பு பணிக்காக 2 லட்சம் செலவு செய்யும் நிலை உள்ளதால் தற்போது டீசல், ஆயில் மற்றும் உதரி பாகங்கள் விலை ஏற்றத்தால் கடன் வாங்கி ஜே.சி.பி. இயந்திரம் இயக்கும் உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் விருத்தாச்சலம் ஜே.சி.பி உரிமையாளர் நலச்சங்கம் சார்பில் இன்று (28/06/2021) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாகவும், அரசு ஒப்பந்ததாரர், தனியார் ஒப்பந்ததாரர், மற்றும் தனி நபர் வேலைக்கு அழைக்கும் பொதுமக்கள் என அனைவருக்கும் தெரியப்படுத்தும் விதமாக, ஒரு மணி நேரத்திற்கு ஜே.சி.பி. இயந்திரத்தின் வாடகை 1,500 ரூபாய் விலை ஏற்றம் செய்துள்ளதாகவும் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
டீசல் மற்றும் உதிரி பாகங்களின் விலை ஏற்றத்தை, தமிழக அரசு குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.