உயர்மின் கோபுர விவகாரம் தொடர்ந்து விவசாயிகளை கொந்தளிப்பில் ஆழ்த்தி வருகிறது. ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், திருவண்ணாமலை உட்பட 16 மாவட்டங்களில் உள்ள விவசாய விளை நிலங்கள் வழியாக உயர் மின்கோபுரம் அமைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிப்பதோடு உயர் மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டால் தங்களின் விளைநிலத்தின் மதிப்பு மிக கடுமையாகக் குறையும், விளைபொருள்கள் சாகுபடியில் பாதிப்பு ஏற்படும், விவசாயம் செய்ய முடியாது, வங்கிகளில் கடன் பெறுவதில் பெரும் சிரமம் ஏற்படும், மொத்தத்தில் எங்களது வாழ்வாதாரமே முழுமையாக பறிபோகும் நிலை உருவாகிவிடும் என வேதனையுடன் கூறுவதோடு விளை நிலத்தை காக்க பல கட்ட போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக விவசாய விளை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை கைவிட வேண்டும்.
விவசாயிகளுக்கு எதிராக உள்ள இந்திய தந்தி சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும். உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு பதிலாக கேபிள் மூலம் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.
விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி தரவில்லை. இதனால் இன்று ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் 500 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் விவசாயிகளின் போராட்டத்தை தடுத்து நிறுத்த ஈரோட்டை சுற்றி கருங்கல்பாளையம் காவேரிக்கரை செக் போஸ்ட், சோலார், ரங்கம்பாளையம், திண்டல், அக்ரஹாரம் உட்பட 8 இடங்களில் தற்காலிக செக்போஸ்ட் அமைத்து 1000க்கும் மேற்பட்ட போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக காத்திருப்பு போராட்டத்திற்காக வந்த விவசாயிகளை ஆங்காங்கே வலுகட்டாயமாக போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர்.
இருப்பினும் பல விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்திற்கு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்காக பேரணியாக சென்றனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம், கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் முனுசாமி உள்ளிட்டோரை போலீசார் கைது செய்ய முற்பட்டனர். அப்போது அவரது தலைமையில் விவசாயிகள் பலர் தரையில் படுத்தபடி கோஷம் எழுப்பினர். இதையடுத்து போலீசார் அவர்களை குண்டு கட்டாக கைது செய்தனர்.
போலீசாரின் தடைகளை தாண்டி, ஈரோடு ஆட்சியர் அலுவலகத்திற்கு நுழைய முயன்ற பல விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும், போலீசாரைக் கண்டித்தும் கோஷமிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவசாயிகள் ஈரோட்டில் 10 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் 300 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.