கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு கிராமங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. அதேபோல், விருத்தாசலம் அருகில் உள்ள தர்மா நல்லூர், ஆலிச்சிகுடி, கம்மாபுரம், கார்குடல், கருவேப்பிலங்குறிச்சி உள்ளிட்ட பல கிராமங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் அந்தந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான உணவு பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் விருத்தாசலம் அருகில் உள்ள சாத்துக்குடல் உச்சிமேடு கிராமத்தையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த கிராமத்திற்குச் செல்வதற்கு அங்குள்ள ஓடை பகுதியைக் கடந்து உச்சிமேடு கிராமத்திற்குச் செல்ல வேண்டும். மழையின் காரணமாக ஓடையில் அதிகளவு தண்ணீர் சென்று கொண்டுள்ளது. அதனால், உச்சிமேடு கிராம மக்கள் ஊரைவிட்டு தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக உள்ளேயும் வெளியேயும் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
அவர்களுக்கான உணவு மற்றும் அடிப்படைத் தேவைகள் கிடைக்காமல் தவித்துள்ளனர். இந்தத் தகவல் விருத்தாசலம் வட்டாட்சியர் சிவக்குமார் அவர்கள் கவனத்திற்குக் கொண்டு சென்றனர். அவர் உடனடியாக கிராம மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் பேஸ்கட், பால், அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை எடுத்துக் கொண்டு அந்த ஊருக்குச் சென்றுள்ளார். அந்த ஊருக்கு முன்பாக ஓடும் ஓடையில் தண்ணீர் மிக அதிகளவில் செல்வதால் அதைக் கடந்து உச்சிமேடு கிராமத்துக்குள் செல்ல பலரும் பயந்து ஒதுங்கி நின்றனர். ஓடை தண்ணீரைக் கடந்துசெல்லத் தயக்கம் காட்டினார்கள். ஆனால், வட்டாட்சியர் சிவகுமார், தான் கொண்டு சென்ற பொருட்களைத் தலையிலும் தோளிலும் சுமந்து கொண்டு ஓடையில் இறங்கி சென்றார்.
இடுப்பு அளவிற்கு ஓடையில் வேகமாகச் சென்ற தண்ணீரைக் கடந்து உச்சிமேடு கிராமத்தினை நோக்கி நடந்துச்சென்றார். அவரை பார்த்த வருவாய்த் துறை ஊழியர்களும் கொண்டுசென்ற பொருட்களை ஆளுக்கொன்றாக எடுத்துக் கொண்டு வட்டாட்சியரைப் பின்தொடர்ந்தனர். உச்சிமேடு கிராமத்திற்குள் சென்று மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களையும் உணவுப் பொருட்களையும் வழங்கினார். அந்த கிராம மக்கள் வட்டாட்சியரின் துணிவைக் கண்டு மனம் நெகிழ்ந்து அவருக்கு நன்றி கூறினார்கள்.
மக்களுக்குப் பொருட்களை வழங்கியதோடு அவர்களுக்கு ஆறுதல் கூறிய வட்டாட்சியர், இன்னும் தேவையான உதவிகளை உடனுக்குடன் செய்து தருவதாக உறுதி அளித்துள்ளார். இந்தத் தகவல் கேள்விப்பட்ட விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரவீன்குமார், படகு மூலம் அந்த வெள்ளத்தைக் கடந்து உச்சிமேடு பகுதிக்குச் சென்று பொதுமக்களைச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். பொதுவாக அரசு அதிகாரிகள், ஊழியர்கள், அலுவலர்கள் தாங்கள் வாங்கும் சம்பளத்திற்கு வேலை செய்கிறோம் என்று கடைமைக்காகப் பணி செய்கிறார்கள். மேலும், பலர் அரசு மற்றும் அதிகாரிகள் உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என்ற கடமை நோக்கில் தங்கள் பணிகளைச் செய்து வரும் இந்த காலத்தில் வட்டாட்சியரின் சிவக்குமார் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் வெள்ள நீரில் கடந்து சென்று மக்களுக்கு உதவி செய்துள்ளது அவரது மனித நேயத்தையும் சக மனிதர்களின் துயரத்தைத் துன்பத்தைப் போக்க வேண்டும் என்ற அவரது நல்ல மனதை வெளிப்படுத்துகிறது. இதற்கு துணிவும் வேண்டும் ஏற்கனவே விருத்தாசலம் வட்டாட்சியராகச் சிறப்பாக மக்கள் பணி செய்து வந்த கவியரசு கரோனாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அவரைப் போன்று சிறப்பாக மக்கள் பணி செய்து வரும் வட்டாட்சியர் சிவக்குமார் அவர்கள் தன்னையும் பாதுகாத்துக்கொண்டு மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்று அவருக்கு அன்போடு மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.