கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள கீழ ஆதனூரின் மையப்பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் பராமரிப்பு மையம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த மையத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட சிறு குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருவதோடு, அவர்களுக்கும் கர்ப்பிணி தாய்மார்களுக்கும் அரசு வழங்கும் மதியஉணவு, சத்துமாவு, முட்டை ஆகிய ஊட்டச்சத்து பொருட்கள் இந்த மையத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த குழந்தைகள் பராமரிப்பு மையத்தின் கட்டடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் மிகவும் சிதிலம் அடைந்து, மழைக்காலங்களில் உள்ளே செல்ல முடியாத அளவிற்கு மழைநீர் தேங்கி நிற்கும் நிலையில் உள்ளது. மேலும், கட்டடத்தின் மேற்கூரை மற்றும் சுற்றுச்சுவர்கள் மிகவும் சிதிலமடைந்து மேற்கூரை ஆனது ஆங்காங்கே பெயர்ந்து உதிர்ந்து விழுந்து கொண்டுள்ளது. இதனால் இங்கு பணி செய்யும் ஊழியர்களுக்கும் பராமரிக்கப்படும் குழந்தைகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டு உள்ளதால், தற்போது அருகில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழு கட்டடத்தில் தற்காலிகமாக மாற்றப்பட்டு குழந்தைகள் பராமரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் பழுதடைந்துள்ள அரசு பள்ளி கட்டடங்களை முற்றிலும் இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதிய கட்டடம் கட்டும் பணியில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சிறு குழந்தைகள் பராமரிக்கப்படும் பாதுகாப்பு மையம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால், அதை இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதிய கட்டடம் கட்டவேண்டி, அதிகாரிகளுக்கு கிராம மக்கள் பல்வேறு மனுக்கள் அனுப்பியும், அதுகுறித்து எதுவும் கண்டுகொள்ளாமல் அரசு அதிகாரிகள் மௌனம் காத்து வருகின்றனர்.
இது தொடர்பாக கிராம மக்கள் பழைய கட்டடத்தை அப்புறப்படுத்தி விட்டு பாதுகாப்பான புதிய கட்டடத்தை விரைந்து கட்டி முடித்து குழந்தைகள் பாதுகாப்பு மையத்தை பாதுகாப்புடன் பராமரிக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கின்றனர். இந்த குழந்தைகள் பராமரிப்பு மைய கட்டிடம் திட்டக்குடி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் அமைச்சருமான சி.வி.கணேசன் அவர்களின் தொகுதியில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.