ஆள் நடமாட்டமில்லாத வீதிகள் – மூடிக்கிடக்கும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் – முழு சோகத்தில் தூத்துக்குடி! இந்தியா – பாக்கித்தான் எல்லையோர நகரம் போர்க்காலத்தில் இறுக மூடிக் கிடக்கும் காட்சிபோல் இருந்தது.
எந்நேரமும் பாய்வதற்கு ஆயத்தமாய் ஆயுதங்களுடன் சுற்றிவரும் காவல் படைகள் ஒருபக்கம்; மறுபக்கம் தடையை மீறி ஊர்வலம் வந்ததாகத் தங்கள் மக்களை சுட்டு வீழ்த்திய காவல்துறையினர்க்கும் ஆட்சியாளர்களுக்கும் எதிராகக் குமுறும் நெஞ்சங்களுடன் மண்ணின் மக்கள்!
தூத்துக்குடி சின்ன சகாயபுரம் (மினி சகாயபுரம்) 17 அகவை மாணவி ஸ்நோலின் 22.05.2018 துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். அவர் வீட்டுக்குச் சென்றோம். ஸ்னோலின் தாயார், பெரியம்மா, சின்னம்மா, உறவினர் என அனைவரின் கதறலைப் பார்த்து நெஞ்சம் பதைத்தோம்! என்ன சொல்லி ஆறுதல் கூற முடியும்? அவர்களின் கதறல் ஓயவில்லை.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமுற்றவர்களைப் பார்த்தோம். தூத்துக்குடி மறை மாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தை செயசீலன் (அகவை 68) வயிற்றில் பாய்ந்த துப்பாக்கிக் குண்டுகள் முதுகு வழியாக வெளியேறியுள்ளன. அவர் தூத்துக்குடி அமெரிக்கன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரைப் பார்த்தோம். அவரிடம் பேச முடியாத நிலை!
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இரண்டு பெரிய வார்டுகளில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிலும், இரும்புத்தடித் தாக்குதலிலும் படுகாயமுற்றவர்கள் சற்றொப்ப 65 பேர் இருந்தார்கள்; பெண்கள் வார்டில் துப்பாக்கிச் சூட்டில் தாக்குண்ட பெண்கள் இருந்தார்கள்.
ஒவ்வொருவரிடமும் விசாரித்து ஆறுதல் கூறினோம். அவர்கள் எல்லாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்னால் அமர்ந்து கோரிக்கை முழக்கம் எழுப்பி மாலை வரை போராட்டம் நடத்தப் போகிறோம் என்ற எண்ணத்தில் வந்திருக்கிறார்கள். குடும்பம் குடும்பமாக வந்திருக்கிறார்கள். பகல் உணவும், குடிநீர் பாட்டிலும் கையோடு எடுத்து வந்திருக்கிறார்கள்.
ஆனால் ஆட்சியாளர்கள் முன் கூட்டியே வேறு வகையாகத் திட்டம் தீட்டியிருக்கிறார்கள். சுட்டுக் கொல்லும் தனிப்பிரிவு காவல்படையினரை வரவழைத்துத் திட்டம் தீட்டியிருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியருடன் அந்தத் தனிப்பிரிவினர் மஞ்சள் சீருடையுடன் முன்கூட்டியே எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியிருக்கிறது. சட்டம் ஒழுங்குச் சிக்கல் எழுந்தால், துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டி வந்தால் – என்ன வகை துப்பாக்கியைப் பயன்படுத்த வேண்டும் என்று கட்டுப்பாடு இருக்கிறது. அவ்வாறு தடை செய்யப்பட்டுள்ள - தொலைவில் குறி பார்த்து சுடும் எஸ்.எல்.ஆர். துப்பாக்கிகளைக் காவல் துறையினர் பயன்படுத்தி சுட்டிருக்கிறார்கள்.
துப்பாக்கிச் சூடு இருவகையாக நடத்தப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட நபரை சாகடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் குறிபார்த்து இடுப்புக்குமேல் சுட்டத்தில்தான் தலை, முகம், மார்பு, வயிறு பாகங்களில் சுடப்பட்ட குண்டு பாய்ந்து அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார்கள். அடுத்த வகையாக கூட்டத்தைக் கலைப்பதற்காக இடுப்பிற்குக் கீழே பலரைச் சுட்டிருக்கிறார்கள். அவர்கள் ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிகிச்சை பெற்றவர்களில் ஒருவர் நேற்று (24.05.2018) இறந்துவிட்டார்.
நாங்கள் மருத்துவமனைக்குப் போகும்முன், நடுப்பகல் நேரத்தில் மருத்துவமனை முன் கூடியிருந்தோர் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 அகவை இளைஞர் காளியப்பன் அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதுவரை மொத்தம் 13 பேரைத் துப்பாக்கிகள் விழுங்கியுள்ள செய்தி தெரிந்துள்ளது.
1965இல் இந்தித் திணிப்பை எதிர்த்து நடந்த மொழிப்போரில் 300க்கும் மேற்பட்டோரை காங்கிரசு ஆட்சி சுட்டுக் கொன்றது. அப்போதுகூட பெண்கள் சுட்டுக் கொல்லப்படவில்லை. ஆனால், அ.தி.மு.க. ஆட்சியில் தூத்துக்குடியில் பெண்கள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்கள். மேலும் சில பெண்கள் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமுற்று மருத்துவமனையில் இருக்கிறார்கள்.
பெண் காவலர்கள் மூர்க்கத்தனமாகத் தாக்கியதைக் காயம்பட்டவர்கள் சொன்னார்கள். தாக்குதலில் கீழே விழுந்து கிடந்த ஒருவர் மார்பில், ஒரு பெண் காவலர் பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டதை பாதிக்கப்பட்டவரே எங்களிடம் சொன்னார். ஒரு காவலர் துப்பாக்கிக் கட்டையைத் திருப்பி, ஓர் இளம்பெண் வயிற்றில் ஓங்கி அடித்ததில் இரத்தப்போக்குடன் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
மக்களிடம் நாங்கள் விசாரித்த இடங்களில் எல்லாம், “திட்டமிட்டு சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்” என்ற கருத்து ஒரே குரலில் வந்தது. அடுத்து, “தூத்துக்குடியை விட்டு காவல்துறையை வெளியேறச் சொல்லுங்கள், நாங்கள் அமைதைியை நிலைநாட்டுகிறோம்” என்று கூறினார்கள்.
இன்று வரை (25.05.2018) தூத்துக்குடியில் நான்கு நாட்களாக இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. கடைகள் மூடிக் கிடப்பதால், குழந்தைகளுக்குப் பால் வாங்கக்கூட வழியில்லை. உணவு உள்ளிட்ட மற்ற தேவைகளின் நிலை பற்றி கற்பனை செய்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் கடந்த அறுபதாண்டுகளில் - வரலாற்றில் இல்லாத அளவிற்கு, மக்கள் வெள்ளம் 22.05.2018 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைக்கு இலட்சக்கணக்கில் பல்வேறு முனைகளில் இருந்து அணி அணியாக ஆண்கள், பெண்கள், மாணவர்கள் எனத் திரண்டு வந்தார்கள். அவர்களை அமைதியாக முற்றுகையிட அனுமதித்து, முழக்கமிட அனுமதித்து, முதலமைச்சர் சார்பில் ஓர் அமைச்சர் அங்கு வந்து, “ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும்” என்று எழுத்து வடிவிலான அறிக்கையை – எந்த இரு பொருளும் இல்லாமல் திட்டவட்டமாக அறிவித்து, மக்களை வெற்றி முழக்கத்துடன் கலையச் செய்திருக்கலாம்.
ஆனால், ஆட்சியாளர்களின் திட்டம் வேறாக இருந்ததுபோல் தெரிகிறது.
காவிரிச் சமவெளியில் ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்றிட – கனிம வேட்டையைத் தடுத்திட – நியூட்ரினோ ஆய்வகத்தைத் தடுத்திட - பல்வேறு இடங்களில் மணல் கொள்ளையைத் தடுத்திட – கோவை பகுதியில் விளை நிலங்களில் கெயில் குழாய்கள் பதிப்பதைத் தடுத்திட - இன்னும் பல்வேறு வாழ்வுரிமைகளுக்காகத் தன்னெழுச்சியாக மக்கள் நடத்திடும் போராட்டங்களைத் தடுத்திட இராணுவத்தை இறக்கிட – மோடி அரசும், எடப்பாடி அரசும் திட்டமிட்டு வருகின்றன. அதற்காக 29.04.2018 அன்று கும்பகோணத்திற்கு அதிவிரைவு இராணுவப்பிரிவு அதிகாரிகளையும், படையாட்களையும் அனுப்பி மாவட்டக் காவல்துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்ய வைத்தனர்.
தூத்துக்குடியில் சனநாயக வழியில் போராடும் மக்களை சகட்டுமேனிக்கு சுட்டுக் கொல்வதைப் பார்த்து, தமிழ்நாட்டில் எல்லாப் பகுதி மக்களும் பீதி அடைந்து, கோழைகளாகிவிட வேண்டும் என்று ஆட்சியாளர்கள் திட்டமிட்டார்கள். ஆனால் தூத்துக்குடியில் இத்தனை துப்பாக்கிக் கொலைகளுக்குப் பின்னர் மக்கள் மேலும் ஆவேசத்துடன் வீரத்துடன் போராடும் உணர்ச்சி பெற்றுள்ளார்கள் என்பதை அனைவரும் பார்க்கிறோம். ஆட்சியாளர்களுக்கும் தெரியும்!
இனியாவது, தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் தங்கள் அணுகுமுறையை மாற்ற வேண்டும்; மக்கள் மீது போர் தொடுக்கும் தங்கள் திட்டத்தைக் கைவிட வேண்டும்.
உடனடியாகச் செய்ய வேண்டியவை
1. தூத்துக்குடியில் சமயம், சமூகம் சார்ந்த தலைவர்கள், வணிகர் சங்கத் தலைவர்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டக் குழுத் தலைவர்கள் – கல்வித்துறை சேர்ந்தவர்கள் – மாணவப் பிரதிநிதிகள் ஆகியோரைக் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கொண்டு அமைதிப் பேச்சு நடத்த வேண்டும். அரசு சார்பில் ஓர் அமைச்சரும் அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும்.
அக்கூட்டத்தில், “ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிவிட்டோம்; சட்டச்சிக்கல்கள் வந்தால் சட்டரீதியாக முறியடித்து ஆலையைத் திறக்க விடமாட்டோம்” என்று முதலமைச்சர் கையொப்பமுடன் உள்ள உறுதிமொழியை எழுத்து வடிவில் மக்களுக்குத் தர வேண்டும்.
2. தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட காவல்துறையினரைத் தவிர வெளியிலிருந்து வர வழைக்கப்பட்ட காவல்துறையினர் அனைவரையும் திருப்பி அனுப்பிவிட வேண்டும்.
3. இதுவரை கைது செய்துள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். விசாரணைக்கென்று பொதுமக்களை அழைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இவற்றைச் செய்தால் தூத்துக்குடி உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களின் பதற்றம் தணியும்! என தெரிவித்துள்ளார் தமிழ்த்தேசியப் பேரியக்க தலைவர் பெ. மணியரசன்.
தமிழ்நாட்டின் “ஜாலியன் வாலாபாக்” ஆகிவிட்ட தூத்துக்குடிக்கு, தமிழ்நாடு காவல்துறை மனித வேட்டை நடத்திய மறுநாளே 23.05.2018 அன்று சென்றோம். தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொருளாளர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் இரெ. இராசு, ம. இலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர் குரும்பூர் மு. தமிழ்மணி, மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் மதுரை பே. மேரி, தோழர்கள் செரபினா, மனித உரிமை மற்றும் தமிழ் உரிமைப் போராளி வழக்கறிஞர் பகத்சிங் மற்றும் குரும்பூர் பகுதித் தோழர்கள் முதலியோரும் தன்னுடன் வந்ததாக தெரிவித்தார்.