Skip to main content

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுகளை 15 ஆண்டுகளாக செயல்படுத்தவில்லை! -விளக்கமளிக்க தலைமை செயலாளருக்கு உத்தரவு!

Published on 12/10/2020 | Edited on 12/10/2020
The court orders issued to help the disabled have not been implemented for 15 years! -Order to the Chief Secretary to explain!

 

 

நீதிமன்றம் பல உத்தரவுகள் பிறப்பித்தும், பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் ஏறி பயணம் செய்யும் வகையில் வசதிகள் செய்து கொடுக்காதது குறித்து, காணொளிக்காட்சி மூலம் ஆஜராகி விளக்கமளிக்க, தமிழக தலைமை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள், ரயில் மற்றும் பேருந்துகள் உள்ளிட்ட போக்குவரத்து துறைகளில், மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும், அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், கடந்த 2017-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

இந்த வழக்கு, கடந்த முறை நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கடந்த 2017 -ஆம் ஆண்டு,  நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பாக, ரயில்வே துறை, பள்ளிக்கல்வி துறை, போக்குவரத்து துறை ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய  உத்தரவிட்டிருந்தனர்.

 

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கடந்த 2017-ஆம் ஆண்டுக்கு பிறகு,  இதுவரை நான்காயிரத்திற்கும் அதிகமான பேருந்துகள் வாங்கப்பட்டாலும், ஒரு பேருந்தில் கூட மாற்றுத்திறனாளிகளுக்கு எந்த வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை என்பது,  நீதிபதிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

 

மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளுடன் கூடிய பேருந்துகளை கொள்முதல் செய்ய அதிக நிதி ஒதுக்க வேண்டியுள்ளதால், எதிர்காலத்தில் இதுபோன்ற பேருந்துகள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என,  தமிழக அரசுத்தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

 

இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், கடந்த 2005-ஆம் ஆண்டு முதல், இந்த வழக்கில் பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டும் தமிழக அரசு இதுவரை செயல்படுத்தாதது குறித்து கேள்வி எழுப்பினர். மேலும், 15 ஆண்டுகளாக, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்தாதது குறித்து, டிசம்பர் 10 -ஆம் தேதி காணொளிக்காட்சி மூலம் ஆஜராகி விளக்கமளிக்க,  தலைமை செயலாளர், போக்குவரத்து துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்