Skip to main content

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

Published on 12/08/2023 | Edited on 12/08/2023

 

Court extends custody to Minister Senthil Balaji

 

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாகச் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயர்நீதிமன்ற அனுமதியோடு சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டு அங்கு மருத்துவக் கண்காணிப்பில் இருந்தார்.

 

இதனிடையே செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் இருப்பதாக அவரது மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு வழக்கில், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது செல்லும் என்றும், அமலாக்கத்துறைக்குக் கைது செய்ய அதிகாரம் இருக்கிறது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தநிலையில், நீதிபதிகள் போபன்னா மற்றும் எம்.எம். சுந்தரேசன் தலைமையிலான அமர்வு முன்பு கடந்த 7 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி கைது செல்லும் என்று கூறி செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது. மேலும் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் அனுமதியளித்து உத்தரவிட்டு இருந்தனர்.

 

இதையடுத்து செந்தில்பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை சார்பில் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார். நீதிமன்றத்தின் உத்தரவின்படி, புழல் சிறையிலிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க, அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு கடந்த 7 ஆம் தேதி இரவே அழைத்து வரப்பட்டார்.

 

அதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர், செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கும் தொடர்புடைய இடங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு விசாரணை இடையே அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு வந்தது.

 

இந்நிலையில் அமலாக்கத்துறையின் 5 நாள் காவல் முடிந்ததைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை எழும்பூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறையினர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு; உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரிய அமலாக்கத்துறை!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Senthil Balaji Bail Petition ED apologized to the Supreme Court

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதற்கிடையே பலமுறை செந்தில் பாலாஜிக்கு சென்னை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் நிராகரிக்கப்பட்டது. 

Senthil Balaji Bail Petition ED apologized to the Supreme Court

இத்தகைய சூழலில் மீண்டும் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி சார்பில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த 1 ஆம் தேதி (01.04.2024) உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கீழமை நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததுடன் அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. முன்னதாக  அமலாக்கத்துறை சார்பில் நேற்று (28.04.2024) இரவு தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “செந்தில் பாலாஜிக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக உள்ளதால் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். அமைச்சராக இல்லாவிட்டாலும், எம்.எல்.ஏ.வாக உள்ள செந்தில் பாலாஜி அதிகாரமிக்க நபராக உள்ளதால், சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. 

Senthil Balaji Bail Petition ED apologized to the Supreme Court

இதனையடுத்து செந்தில்பாலாஜி தரப்பில் வாதிடுகையில், “வழக்கில் விசாரணையை தாமதப்படுத்த அமலாக்கத்துறை முயற்சிக்கிறது. தனிநபர்களுக்குள் நடந்த கொடுக்கல், வாங்கல் விவகாரத்தை நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட மோசடியாக கட்டமைக்கின்றனர்” என குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. இத்தகைய சூழலில் இந்த வழக்கில் தாமதமாக பதில் மனு தாக்கல் செய்ததற்கு உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மன்னிப்பு கோரியது. முன்னதாக அமலாக்கத்துறை மிகத் தாமதமாக பதில் மனு தாக்கல் செய்துள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பு குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு மே 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

Next Story

2024 ஆம் ஆண்டிற்கான விசிக விருதுகள் அறிவிப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
2024 Vck Awards Announcement!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றுபவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமையினருக்கு, “அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு” ஆகிய விருதுகள் 2007 முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டு முதல் ‘மார்க்ஸ் மாமணி’ விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மேனாள் கர்நாடக முதலமைச்சர் சித்தாரமையா, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய், தோழர் து.ராஜா, இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், சொல்லின் செல்வர் ஆ.சக்திதாசன், பாவலர் வை.பாலசுந்தரம், பேராசிரியர் காதர்மொய்தீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, ஏ.எஸ். பொன்னம்மாள், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் உள்ளிட்டோருக்கு  இதுவரை விசிக விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான விசிக - விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் அம்பேத்கர் சுடர் விருது - நடிகர் பிரகாஷ்ராஜ், பெரியார் ஒளி விருது - வழக்கறிஞரும், திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளருமான அருள்மொழி, மார்க்ஸ் மாமணி விருது - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், காமராசர் கதிர் விருது - இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம், அயோத்திதாசர் ஆதவன் விருது - பேராசிரியர் ராஜ்கௌதமன், காயிதேமில்லத் பிறை விருது - வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவர்  எஸ்.என். சிக்கந்தர், செம்மொழி ஞாயிறு விருது - கல்வெட்டியலறிஞர் எ. சுப்பராயலுவுக்கும் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுகள் வழங்கும் விழா மே 25 ஆம் தேதி (25.05.2024) சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வெளியிட்டுள்ளார்.