Skip to main content

இரட்டிப்பு பணம் தருவதாக ரூ. 80 லட்சம் மோசடி; தம்பதியினர் கைது

Published on 04/09/2023 | Edited on 04/09/2023

 

 couple who cheated 80 lakhs by claiming to give double money arrested

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்தவர் விவசாயி சுந்தர்ராஜன்(வயது 47). இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஐயம்பெருமாள் என்பவர் மூலம் பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் ரோடு ரோஸ் நகரைச் சேர்ந்த ரவிச்சந்திரன்(53) என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு அறிமுகமானார். அப்போது, தான் பெரிய நிறுவனத்தில் பல நபர்களிடம் பெற்ற பணத்தைக் கொண்டு பல கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் செய்து வருவதாகவும், அந்த தொழிலில் நல்ல லாபம் கிடைக்கிறது எனவும், அந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய மேலும் பணம் தேவைப்படுவதாகவும், முதலீடு செய்யும் பணத்தை ஆறு மாதத்தில் இரட்டிப்பாக தருவதாகவும் ரவிச்சந்திரன் கூறியுள்ளார். 

 

மேலும் இரட்டிப்பாக பணம் தரும்போது 10% கமிஷன் தர வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனை நம்பிய சுந்தர்ராஜன் கடந்த 2020 ஆம் ஆண்டு ரவிச்சந்திரன் மற்றும் அவரது மனைவி கற்பகம்(47) ஆகியோரிடம் ரூபாய் 20 லட்சம் கொடுத்தார். மேலும் இவரைப் போன்றே ராமநத்தம் ஐயம்பெருமாள் ரூபாய் 10 லட்சம், தச்சூர் சீதாராமன் ரூபாய் 20.37 லட்சம், ராமநத்தம் ராஜி கண்ணன் 30 லட்சம் என நான்கு பேரும் மொத்தம் ரூபாய் 80.37 லட்சம் கொடுத்துள்ளனர்.

 

பணத்தைப் பெற்றுக் கொண்டு ரவிச்சந்திரன், கற்பகம் ஆகியோர் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்தனர். இதுகுறித்து சுந்தர்ராஜன் கொடுத்த புகாரின் பேரில், கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து ரவிச்சந்திரன் மற்றும் அவரது மனைவி கற்பகம் ஆகியோரைக் கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் மோசடி செய்து ஏமாற்றிய பணத்தை குடும்பச் செலவு மற்றும் ஆடம்பர செலவு செய்துவிட்டதாக போலீசாரிடம் கூறினர். அதையடுத்து அவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் மொபைல் ஃபோன்களை போலீசார் பதிவு செய்தனர். இருவரையும் திட்டக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறைச் சாலையில் அடைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்