நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவைத் தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
இற்கிடையே,மொத்தம் 26 மக்களவைத் தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில் மே 7ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தில் நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 19ஆம் தேதி எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில், காங்கிரஸ், பா.ஜ.க, மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அதன்படி, குஜ்ராத் மாநிலத்துக்கு உட்பட்ட சூரத் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் போட்டியிட பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இதில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்கள் வேட்புமனுக்களை நிராகரித்ததால், சூரத் மக்களவைத் தொகுதிக்கான போட்டியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறியது. மேலும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் கடந்த 24ஆம் தேதி என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தத் தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் உட்பட அனைத்து சுயேட்சை வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுவிட்டனர். இதனைத் தொடர்ந்து, சூரத் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் முகேஷ் தலால், வாக்குப்பதிவுக்கு முன்னரே போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்தில் உள்ள வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை வாபஸ் பெற வேண்டிய கடைசி நாளின் போது, இந்தூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான க்ஷய் கண்டி பாம் தனது மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டு பா.ஜ.கவில் இணைந்தார். இதற்கு காங்கிரஸ் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், ஒடிசா மாநிலம் புரி தொகுதி வேட்பாளர் சரிதா மொஹாந்தி பிரச்சார செலவுக்கு பணம் இல்லாததால் காங்கிரஸ் தனக்கு வழங்கிய சீட்டை கட்சியிடமே திருப்பி வழங்கியுள்ளார்.
இது குறித்து, சரிதா மொஹாந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலுக்கு எழுதிய கடிதத்தில், ‘எனக்கு கட்சியில் இருந்து நிதி மறுக்கப்பட்டது. சட்டசபை தொகுதிகளில், பலவீனமான வேட்பாளர்களுக்கு சீட்டு வழங்கப்பட்டது. பா.ஜ.க,வும், பி.ஜே.டி.யும், பணத்தின் மலையில் அமர்ந்துள்ளனர். அது கடினமாக இருந்தது. எங்கும் செல்வத்தின் அசிங்கமான காட்சி. நான் போட்டியிட விரும்பவில்லை. மக்கள் சார்ந்த பிரச்சாரத்தை நான் விரும்பினேன். ஆனால் நிதி பற்றாக்குறையால் அதுவும் சாத்தியமில்லை. கட்சியும் பொறுப்பல்ல. பா.ஜ.க அரசு அக்கட்சியை முடக்கி விட்டது. செலவுகளுக்கு நிறைய தடைகள் உள்ளன. எனக்கு பதில்கள் கிடைத்தன. அவர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.
நான் 10 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் அரசியலில் நுழைந்த போது பூரியில் எனது பிரச்சாரத்திற்கு என்னிடம் உள்ள பணம் அனைத்தையும் கொடுத்துள்ளேன். முற்போக்கு அரசியலுக்கான எனது பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்க நான் ஒரு பொது நன்கொடை இயக்கத்தை முயற்சித்தேன். நான் திட்டமிடப்பட்ட பிரச்சார செலவினங்களைக் குறைந்தபட்சமாக குறைக்க முயற்சித்தேன். பூரியில் வெற்றிப் பிரச்சாரத்தில் இருந்து நிதி நெருக்கடி மட்டுமே எங்களைத் தடுத்து நிறுத்துகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. கட்சி நிதியில்லாமல் பிரச்சாரத்தை மேற்கொள்ள முடியாது என்று வருந்துகிறேன். எனவே பூரி நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் சீட்டை நான் திருப்பித் தருகிறேன்’ எனத் தெரிவித்தார்.