தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துவருகிறது. கடந்த சில தினங்களாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்துவருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதற்கிடையே, சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழையால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பாக முதல்வர், அமைச்சர்கள் ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு செய்துவருகிறார்கள். இந்நிலையில், சென்னையில் அதிக மழையால் பாதிக்கப்பட்டுள்ள தி.நகர் பகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (10.11.2021) ஆய்வு செய்தார். பாதிப்பு பகுதிகளில் மீட்பு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் கூறிய அவர், செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தார். அப்போது தி.நகர் பகுதியில் இந்த அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதே எனக் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளித்த அவர், "கடந்த ஆட்சியில் தி.நகரில் உருவான ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் லஞ்சம் வாங்கி, ஊழல் செய்து, கமிஷன் பெற்று அரைகுறையாக வேலையை செய்திருக்கிறார்கள். அதனால்தான் இங்கு இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது" என்றார்.