தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் கடுமையாக இருந்ததன் காரணமாக, கடந்த இரண்டு மாதங்களாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கானது அமலில் இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக கரோனாவின் தாக்கம் குறைந்ததால், விதிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தி படிப்படியாக தளர்வுகள் அளித்துவருகின்றனர். அந்த வகையில், தற்போது மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் கரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டுவருகின்றனர்.
அதேபோல், சென்னை தி.நகர் ரெங்கநாதன் தெருவில் கரோனா விதிகளை மீறி, தனிமனித இடைவெளி இல்லாமல் மக்கள் கூட்டம் அதிகரித்துவருகிறது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாலை மற்றும் கடைகளுக்கு உள்ளே சென்று அறிவுரைகள் கூறினர். இதில், சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் சரண்யா ஹரி, விஷ்ணு மஹாஜன் (துணை கமிஷனர், வருவாய் மற்றும் நிதி), தி.நகர் துணை ஆணையர் ஹரிகிரன் உள்ளிட்டோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.