சீனாவில் உருவான கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 5000க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். அனைத்து நாடுகளும் கரோனா வைரஸை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகின்றன. இந்தியாவிலும் கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் வரும் 31ஆம் தேதி வரை மூட தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது. ஆனால் 10, +2 அரசுத்தேர்வுகள் மற்றும் நுழைவுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் மருத்துவ மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் மட்டும் தொடர்ந்து இயங்கும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் அங்கன்வாடி மையங்கள் திரையரங்குகள், வணிக வளாகங்கள், அனைத்தையும் மார்ச் 31 வரை மூட முடிவெடுத்துள்ள தமிழக அரசு, திருமண மண்டபங்களில் திட்டமிட்ட நிகழ்வுகளை தவிர புதிய நிகழ்வுகளை நடத்த வேண்டாம், சுற்றுலா செல்ல மக்கள் திட்டமிட வேண்டாம், கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. அங்கன்வாடி மையங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு 15 நாட்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை குடும்பத்தினரிடம் வழங்கப்படும் என்றும் அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.