கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழகத்தில் உள்ள மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதிகளை ஒதுக்கி வருகின்றனர். அதன்படி திமுகவை சேர்ந்தவரும், அரக்கோணம் தொகுதி எம்.பியுமான ஜெகத்ரட்சகன் அவரது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 1 கோடி ரூபாயை வழங்குவதாக அறிவித்தார்.
அதேபோல் இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், இராணிப்பேட்டை திமுக மா.செவுமான காந்தி, ஆற்காடு தொகுதி எம்.எல்.ஏவான திமுகவை சேர்ந்த ஈஸ்வரப்பன் இருவரும் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா 25 லட்ச ரூபாய் என ஒதுக்கியுள்ளனர். எம்.பி நிதி ஒதுக்கிய கடிதம் மற்றும் தங்களது நிதி கடிதத்தை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினியிடம், எம்.எல்.ஏக்கள் காந்தி, ஈஸ்வரப்பன் ஆகிய இருவரும் நேரில் சென்று மார்ச் 27ந்தேதி வழங்கினர்.
இதேபோல் வேலூர் மாவட்ட திமுக செயலாளரும், அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏவுமான நந்தகுமார், தனது தொகுதி நிதியில் இருந்து 25 லட்ச ரூபாயைத் தனது தொகுதியில் உள்ள மருத்துவமனைகளில் உயிர் காக்கும் கவசம் மற்றும் மருந்துகள் வாங்க ஒதுக்கியதற்கான கடிதத்தை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பினார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் எம்.எல்.ஏ திமுகவை சேர்ந்த வில்வநாதன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 25 லட்ச ரூபாய்க்கான கடிதத்தை மாவட்ட ஆட்சியர் சிவன் அருளிடம் நேரில் சென்று வழங்கினார். மேலும் தொகுதியில் உள்ள சில பகுதிகளுக்குச் சென்று மக்களிடம் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள், கூட்டமாக நிற்காதீர்கள் எனப் பேசிய அவர், 2 ஆயிரம் பேருக்கு முகக் கவசங்களை வழங்கினார்.