தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, துப்பாக்கிச் சூட்டில் பலியானோருக்கு, இன்று முதலாவது ஆண்டு நினைவு அஞ்சலி அனுசரிக்கப்படுகிறது . இதற்கான அஞ்சலி கூட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி கொடுக்க மறுத்து வருகிறது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டதை அடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு முதலானம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பலர் பல்வேறு இடங்களில் நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரியில் முதலானம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து ஆங்காங்கே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் உள்ள கோயில்கள் மற்றும் தேவாலயங்களிலும் பலியானவர்களுக்கு பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தூத்துக்குடி முழுவதும் அஞ்சலி செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
இந்த நிலையில் தடையை மீறி திருச்சியில் மக்கள் அதிகாரம் சார்பில் மத்திய பேருந்து நிலையத்தில் கைகளில் மெழுத்திரி ஏந்தியும் வாயில் கறுப்பு துணி கட்டியும் ஆர்பாட்டம் நடத்தினார்கள். போராட்டத்தில் பேசிய செழியன், சுட்டுகொல்லப் பட்டவர்களுக்கு ஒரு நினைவிடம் அமைக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலைகள் நிரந்தரமாக மூடுவதற்கு உத்தரவு வேண்டும் என்று கோரிக்கைகளை வலிறுத்தி மௌன அஞ்சலி போராட்டம் நடத்தி கேட்டோம். ஆனால் ஆளும் தமிழக அரசு போலிஸ் துணையோடு எங்களை அடக்க மட்டுமே முயற்சி செய்கிறது. மத்திய அரசின் கைகூலியாக செயல்படுகிறது என்று குற்றம் சாட்டினார்.
பாதுகாப்பிற்கு வந்த கண்டோன்மென்ட் ஏசி மணிகண்டன் தலைமையின் கீழ் இந்த ஆர்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என்று சொல்லி இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட போலிசார் அனைவரையும் கைது செய்து மண்டபத்திற்கு அழைத்து சென்றார்.ஏராளமான பெண்கள், கல்லூரி மாணவிகள், விவசாயிகள் சங்க தலைவர் சின்னதுரை உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.