உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவி உலகை அச்சுறுத்தி வருகிறது. லட்ச கண்ககான மக்கள் இந்நோய் காரணமாக பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் பல மருந்து ஆராய்ச்சி நிறுவனங்கள் கரோனாவுக்கான தடுப்பு மருந்தைக் கண்டறியும் முயற்சியில் ஈடுப்பட்டன. அதில் ரஷ்ய நிறுவனம், சீனா நிறுவனம், அமெரிக்க நிறுவனம் போன்றவை விலங்குகளிடம் அதனைப் பரிசோதனை நடத்திவிட்டு மனிதர்களுக்குப் பரிசோதனை செய்கின்றன. அந்த வரிசையில் இந்தியாவில் உள்ள ஒரு நிறுவனமும் இறங்கியுள்ளது.
இந்தியாவில் ஆந்திரா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள மத்திய அரசின் பாரத் பயோடெக் நிறுவனம், கரோனாவுக்கான தடுப்பு மருந்தைக் கண்டறிந்துள்ளது. பாரத் கோவாக்சின் என்கிற பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த மருந்தை பாரத் பயோடெக், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், இந்திய வைரலாஜி துறையின் ஒத்துழைப்புடன் கண்டுபிடிக்கப்பட்டு, இது விலங்குகளுக்குப் பரிசோதனை முறையில் செலுத்தப்பட்டது. இந்த மருந்து நல்ல பலனைத் தருவதாக ஆய்வக முடிவுகள் தெரிவிக்கின்றன.
அதனைத் தொடர்ந்து மனிதர்களிடம் பரிசோதிக்கும் முறைக்கு வந்துள்ளது. இந்தியா முழுவதும் சில முன்னணி, ஆராய்ச்சி மையத்தைக் கொண்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளாக உள்ளவர்களுக்கு இந்த பாரத் கோவாக்சின் என்கிற கரோனா மருந்தைச் செலுத்துவதற்கான அனுமதியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திடம் இருந்து பாரத் பயோடெக் நிறுவனம் பெற்றுள்ளது. அந்த மருந்தை இந்தியாவின் முக்கிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் வேலூரில் உள்ள பிரபலமான அந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அந்த மருந்து அனுப்பப்பட்டு கரோனா நோயாளிகளின் உடலில் செலுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இதற்காக நோளாளிகளிடம் அனுமதி பெற்று இந்த மருந்து தரப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த நோயாளிகள் தனியாக வைக்கப்பட்டு அவர்கள் சிறப்பு மருத்துவக் கண்காணிப்பின் கீழ் வைக்கப்படுகின்றனராம். அவர்களின் ரத்தம், சிறுநீர் போன்றவை தினமும் மருந்து செலுத்துவதற்கு முன்பு, பின்பு என எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறதாம். தொடர்ச்சியாக ஒரு மாதத்துக்கு இந்தப் பரிசோதனை நடைபெறுமாம்.
இந்தப் பரிசோதனையில் வரும் முடிவுகளை வைத்தே அதன்பின் இந்த மருந்திற்கு அனுமதி தருவதா, வேண்டாமா என்கிற முடிவுகள் எடுக்கப்படும் என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.