ஐந்து மாநில தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு, அதனைத் தொடர்ந்து வீட்டு பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்வு என தொடர்ந்து 'விலையுயர்வு' என்ற காரணி அடித்தட்டு பொருளாதாரத்தில் உள்ள மக்களை கவலைகொள்ள செய்திருக்கும் நிலையில், கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி சொத்து வரி உயர்வு தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதேபோல வர்த்தக சிலிண்டருக்கான விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் அண்மையில் உயர்த்தின.
சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டரின் விலை 2,250 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனால் 10 ரூபாய்க்கு விற்பனையான டீ, 12 ரூபாயாகவும் 13 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட காஃபி, 15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி டீ, காஃபி பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதேபோல் அண்மையில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலையும் உயர்த்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.