நடிகர் சூர்யாவின் நடிப்பில் ஒ.டி.டியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த 'சூரரைப்போற்று' திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் பாடல் குறித்த புகார் வந்தால் அதைச் சட்டப்படி பரிசீலித்து முடிவெடுக்க தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் சூர்யா நடித்து விரைவில் வெளியாக இருக்கும் சூரரைப்போற்று திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ''மண்ணுருண்ட மேல இந்த மனுசப்பையன் ஆட்டம் பாரு'' என்ற பாடலில் இடம் பெற்றுள்ள சில வரிகள் சமூக பூசல்களை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தர்மபுரியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் தர்மபுரி மாவட்ட எஸ்.பிக்கு ஆன்லைனில் புகார் அளித்திருந்தார்.
அந்தப் புகாரில், குறிப்பிட்ட பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் அனைத்துச் சமூகத்தினரும் அமைதியாக வாழும் தமிழகத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும். எனவே 2022ஆம் ஆண்டு வரை சூரரைப்போற்று படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
புகார் கொடுத்து ஐந்து மாதங்கள் ஆகியும் அந்தப் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கார்த்திக் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரருடைய புகார் காவல் கண்காணிப்பாளருக்கு வந்து சேரவில்லை எனக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து காவல் கண்காணிப்பாளருக்கு மீண்டும் புகார் மனுவை அளிக்கலாம் என மனுதாரருக்கு நீதிபதி அறிவுரை வழங்கியதோடு, அந்தப் புகாரைச் சட்டப்படி பரிசீலித்து முடிவு எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.