இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும், இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்தன. இதனையடுத்து, நேற்று (15ம் தேதி) குஜராத் மாநிலம், ராஜ்கோட் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி துவங்கியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர் ஜாக் கிராலியின் விக்கெட்டை இந்திய அணி வீரர் அஸ்வின் வீழ்த்தினார்.
இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். 87 இன்னிங்ஸ்களில் ஸ்ரீலங்கா வீரர் முரளிதரன் 500 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்த நிலையில், தற்போது 98 இன்னிங்ஸ்களில் இந்திய வீரர் அஸ்வின் 500 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அஸ்வினின் இந்த சாதனைக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 500வது விக்கெட்டை பெற்ற அஸ்வினுக்கு வாழ்த்துகள். சாதனைகளை முறியடித்து கனவுகளை நனவாக்கியவர் சென்னையின் மைந்தன் அஸ்வின். அவரின் பந்துவீச்சில் திறமை, தீர்க்கமான இலக்கு வெளிப்படுகிறது. இது உண்மையான மைல்கல்லைக் குறிக்கிறது. அவரது மாயாஜால பந்துவீச்சு, 500வது விக்கெட்டை கைப்பற்ற உதவியுள்ளது. அவர் மேலும் ஏராளமான விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.