வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே கோடியூர் பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன் இவரது மகன் சதீஸ். இவர் திருப்பத்துாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் சக்கரகுப்பத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் 17 வயது மகளும் கடந்த ஒராண்டாக காதலித்து வந்தனர்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்களின் காதலை அறிந்த சதீசின் பெற்றோர் சதீஸ்சை திட்டியதோடு, இதை நம்ம சாதி சனம் ஒத்துக்காது, அதனால் அந்த பொண்ணை மறந்துடு என எச்சரித்துள்ளனர்.
இதனால் கடந்த சில வாரங்களாக சதீஸ் சுமதியிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். அதனால் விரக்தியடைந்த சுமதி, சதீஸ் தன்னை காதலித்து ஏமாற்றியதாக தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இந்நிலையில் செப்டம்பர் 30ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு சதீஸ் தனது வீட்டில் துாங்கி கொண்டு இருந்தார். அப்போது சக்கரகுப்பத்தை சேர்ந்த அவரது நண்பர் ஒருவர் சதீசை உடனே தன்னோடு வா என கூறி சதீசை சக்கரகுப்பத்தில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு சுமதி மற்றும் அவரது குடும்பத்தினர் சதீஸ் வருகைக்காக காத்திருப்பதை பார்த்து சதீஸ் அதிர்ச்சியடைந்தார். அங்கு வந்த சதீஸிடம், அப்பெண்ணின் குடும்பத்தார், ''அவ கழுத்தல தாலி கட்டலன்னா நடக்கறதே வேற'' என மிரட்டியுள்ளனர்.
நள்ளிரவு சத்தம் கேட்டு ஊரே அங்கு திரண்டுள்ளது, அவர்களும் காதல் விவகாரத்தை அறிந்து தாலிக்கட்டு என மிரட்டியுள்ளனர். மிரட்டலுக்கு பயந்து அந்த பெண்ணின் கழுத்தில் நள்ளிரவில் தாலிக்கட்டியுள்ளார். பின்னர் இருவரையும் அந்த பெண்ணின் குடும்பத்தினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
இந்த விவகாரம் அக்டோபர் 1ந் தேதி காலை சதீஷ் குடும்பத்துக்கு தெரிய வந்துள்ளது. மகனுக்கு கட்டாய திருமணம் நடைபெற்றதை அறிந்த சதீசின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
இது தொடர்பாக சுமதியின் குடும்பத்தினரிடம் இருந்து தங்கள் மகனை மீட்டுதரகோரி சதீசின் தந்தை பச்சையப்பன் ஜோலார்பேட்டை போலீசில் புகாரளித்தார். அதன் பேரில் போலீசார் அந்த பெண்ணின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் 5 பேரை பிடித்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக திருப்பத்துார் சப் கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திடம் புகார் மனு அளித்துள்ளனர்.
ஜோலார்பேட்டை பகுதியில் தான் அதிமுகவை சேர்ந்த வணிக வரித்துறை அமைச்சர் வீரமணி வீடு உள்ளது. இந்த தொகுதியின் எம்.எல்.ஏவும் இவரே. அமைச்சரின் ஊரில் இருந்து ஒரு வாலிபரை கடத்தி சென்று நள்ளிரவில் ஒரு மைனர் பெண்ணுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தது மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.