Skip to main content

பயிற்சியாளரின் அறிவுறுத்தல்களை மாணவி சரியாக பின்பற்றாததாலே உயிரிழப்பு ஏற்பட்டது: கல்லூரி முதல்வர் தகவல்

Published on 13/07/2018 | Edited on 13/07/2018
collede


பயிற்சியாளரின் அறிவுறுத்தல்களை மாணவி சரியாக பின்பற்றாததாலே உயிரிழப்பு ஏற்பட்டது என கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் விஜயலெஷ்மி தெரிவித்துள்ளார்.

கோவை நரசிபுரத்தில் உள்ள கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாணவ-மாணவிகள் பேரிடர் மேலாண்மை மற்றும் முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது 2-வது மாடியில் இருந்து மாணவி லோகேஸ்வரியை பயிற்சியாளர் தள்ளியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பயிற்சியாளரின் அலட்சியமே மாணவியின் உயிரிழப்புக்கு காரணம் என கூறப்பட்டது.

இதனிடையே உயிரிழந்த மாணவியின் தந்தை நல்லா கவுண்டர் ஆலந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சென்னையை சேர்ந்த பயிற்சியாளர் ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ள தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், பேரிடர் பயிற்சியின் போது மாணவி உயிரிழந்தது துரதிருஷ்டவசமானது. ஒரு இளம் உயிரை நாம் இழந்துவிட்டோம். இது எதிர்பாராத ஒன்று. பயிற்சியில் உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள். எனினும், பயிற்சி அளித்தவர் என்டிஎம்டிவை சேர்ந்தவர் இல்லை, இந்த சம்பவத்திற்கும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கும் தொடர்பில்லை என விளக்கம் அளித்துள்ளது.
 

 

 

இந்நிலையில், சம்பவம் குறித்து கல்லூரியின் முதல்வர் விஜயலெஷ்மி கூறும்போது,

கல்லூரியில் நடந்த பேரிடர் மேலாண்மை மற்றும் முதலுதவி பயிற்சியின் போது பயிற்சியாளர் அளித்த அறிவுறுத்தல்களை மாணவி லோகேஸ்வரி சரியாக பின்பற்றாததாலே அவர் உயிரிழக்க நேர்ந்தது என தெரிவித்துள்ளார்.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தன்னை காத்துக்கொள்ள, கல்லூரிக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை சேர்ந்தவர் அல்ல, அதனால் சம்பவத்திற்கும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கும் தொடர்பில்லை என்கிறது. கல்லூரி நிர்வாகமோ, தன்னை காத்துக்கொள்ள, மாணவி பயிற்சியாளர் அளித்த அறிவுறுத்தல்களை முறையாக பின்பற்றாததாலே உயிரிழந்துள்ளார் என்கிறது. அப்படி என்றால், யார் தான் மாணவி உயிரிழப்புக்கு பொறுப்பு?

கல்லூரிக்கு அனுப்பிய எனது மகளை அநியாயமாக தள்ளிவிட்டு கொன்று விட்டனரே என மாணவியின் பெற்றோர் கண்ணீர் மல்கின்றனர். அவர்களது கண்ணீருக்கு யார் பதில் சொல்வது?

 

சார்ந்த செய்திகள்