கரோனா தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் மிகத் தீவிரமாக பரவிவருகிறது. பல்வேறு இடங்களில் தொற்று பாதித்தவர்களை அனுமதிக்க மருத்துவமனையில் படுக்கைகள் இல்லாமலும், தொற்று பாதித்தவர்களுக்கு ஆக்சிஜன் இல்லாமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கரோனாவின் இந்த இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. சில மாநில அரசுகள் முழு ஊரடங்கையும், பல மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கையும் வார இறுதியில் முழு ஊரடங்கையும் நடைமுறைப்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் பணிபுரிந்துவரும் வட மாநிலத் தொழிலாளர்கள் பலர் கரோனா அச்சம் காரணமாகவும், முழு ஊரடங்கு அமலாகிவிடுமோ என்று அச்சத்தின் காரணமாகவும் தங்களது சொந்து ஊர்களுக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், நேற்று (28.04.2021) கோவையிலிருந்து டெல்லி செல்ல ஜம்மூ காஷ்மீரைச் சேர்ந்த ஜோஹிந்தர் குமார் என்பவர் கோவை விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார். நேற்று இரவு கோவை விமான நிலையத்திற்கு வந்தவருக்கு அடையாள அட்டை, பயணச் சீட்டு உள்ளிட்ட பரிசோதனைகள் நடந்திருக்கிறது. தொடர்ந்து ‘பை’ சோதனைக்குச் சென்றபோது, அவரது கைப்பையில் நான்கு துப்பாக்கிக் குண்டுகள் இருந்தன. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பரிசோதனை செய்யும் அதிகாரிகள், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்து பிளமேடு காவல் நிலைய காவல்துறையினர் விமான நிலையம் வந்து, ஜோஹிந்தர் குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர், ஜம்மூ காஷ்மீரைச் சேர்ந்தவர் என்பதும், கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பாதுகாப்பு பணி அதிகாரியாக இருப்பதும் தெரியவந்தது. மேலும், அவர் ஊருக்குச் செல்லும் அவசரத்தில் கைப்பையில் இருந்த துப்பாக்கிக் குண்டுகளை எடுத்து வைக்க மறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, தன்னிடம் இருக்கும் துப்பாக்கிக்கு முறையான ஆவணங்களை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பீளமேடு காவல்துறையினர் அவரிடம் இருந்த துப்பாக்கியின் ஆவணங்களை சரிபார்த்தனர். அனைத்தும் முறையாக இருந்துள்ளது. தற்போது அவரிடம் மேல் விசராணை நடத்திவருகின்றனர்.