18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 88 தொகுதிகள் தேர்தல் நடைபெற்றது.
இதில், இரண்டாம் கட்டத் தேர்தலில் 60.69% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, திரிபுரா மாநிலத்தில் அதிகபட்சமாக 79.66% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், குறைந்தபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் 54.85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், மணிப்பூர் 78.78%, சத்தீஸ்கர் 75.16%, மேற்கு வங்கம் 73.78%, அசாம் 77.35%, ஜம்மு காஷ்மீர் 72.32%, கேரளா 70.21%, கர்நாடகா 68.47%, ராஜஸ்தான் 64.07%, மத்தியப் பிரதேசம் 58.26%, மகாராஷ்டிரா 59.63%, பீகார் 57.81% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இரண்டாம் கட்டத் தேர்தல் நேற்று (26-04-24) முடிவடைந்த நிலையில், மூன்றாம் கட்டத் தேர்தல் வரும் மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 94 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.