நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக வாக்களித்த இளைஞர்கள் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வாக்களித்திருப்பதும், சமூக நலத்திட்டங்கள், ஊழல் ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு வாக்களித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி தேர்தல் நடந்தது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாதக என நான்கு முனை போட்டி நிலவியது. தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் முதல் தலைமுறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர். முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்களின் ஆதரவு யாருக்கு? என்பதில் அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில், சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் முதன் முதலாக வாக்களித்துவிட்டு வந்த இளைஞர்கள், இளம்பெண்களிடம் பேசினோம். அவர்கள் ஊழல் மற்றும் சமூக நலத்திட்டங்களின் அடிப்படையில் வாக்களித்து இருப்பதும், பெரும்பாலானோர் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்திருப்பதும் தெரிய வந்தது.
இதில் இன்னொரு சுவாரஸ்ய தகவலும் கிடைத்தது. முதல் முறை வாக்களித்தவர்களில் இளம்பெண்கள் மாநில அரசின் செயல்திட்டங்களின் அடிப்படையிலும், இளைஞர்கள் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அதாவது ஒரே வயதாக இருந்தாலும் இளம்பெண்கள், இளைஞர்களின் சிந்தனை வேறு வேறாக இருக்கிறது. என்றாலும், அவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை வெளிப்படையாக கூற மறுத்துவிட்டனர். எனினும், நம்முடைய கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் மூலம், யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை கிட்டத்தட்ட யூகிக்க முடிந்தது.
முதல்முறையாக வாக்களித்த அனுபவம் எப்படி இருந்தது?, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் பெற்றோரின் தலையீடு இருந்ததா?, உங்கள் வாக்கு தேசிய கட்சிக்கா? அல்லது மாநில கட்சிக்கா?, எதன் அடிப்படையில் வாக்களித்தீர்கள்?, உங்களைக் கவர்ந்த தமிழக அரசின் திட்டங்கள் என்னென்ன? ஆகிய கேள்விகளை முன்வைத்தோம். சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் முதல் தலைமுறை வாக்காளர்கள் சிலரைச் சந்தித்தோம். அவர்கள் கூறியதாவது..
அக்ஷய பிரியா(பி.எஸ்சி., மாணவி): முதல்முறையாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்ததே ஜாலியான அனுபவமாக இருந்தது. யார் அதிகாரத்திற்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமோ அதை மனதில் வைத்தும், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதை கருத்தில்கொண்டும் வாக்களித்தேன்.
பூர்ணிமா(பி.இ., மாணவி): ஒரு குடிமகளாக வாக்களிப்பது நமது கடமை. யாருக்கு ஓட்டுப் போடணும் என்று அப்பா, அம்மா உட்பட யாருடைய தலையீடும் இல்லாமல் நானாக சிந்தித்து வாக்களித்தேன். யார் வந்தால் நல்லது செய்வாங்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். நான் தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை. மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இப்போதுள்ள அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களில் உள்ள நல்லது, கெட்டது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.
அகல்யா(பி.காம்., சி.ஏ., மாணவி): முதல் முறையாக வாக்களிக்கப் போகிறோம் என்பதே சந்தோஷமாகத்தான் இருந்தது. எங்களுக்குனு ஒரு அடையாள அட்டை கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் இப்போதுள்ள அரசும் நல்லாதான் செயல்படுகிறது. இன்னும் சிறப்பாக இருந்தால் நன்றாக இருக்கும்.
சவுந்தர்யா(எம்.ஏ., மாணவி, அகல்யாவின் சகோதரி): இந்த நாட்டுக்கு ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை எங்களிடம் கொடுத்திருக்கிறார்களே என்று பெருமையாக இருக்கிறது. நானும், என் சகோதரி அகல்யாவும் ஒரு தேசியக் கட்சிக்குதான் ஓட்டுபோட்டோம். நாடு நல்ல நிலையில் செல்ல வேண்டும் என்பதாலும், வலிமையான பிரதமர் வேண்டும் என்பதாலும் வாக்களித்தோம். இப்போதுள்ள மத்திய அரசும், தமிழகத்தில், திமுக அரசும் நன்றாகத்தான் செயல்படுகிறது.
நிவேதா(பி.ஏ., மாணவி): முதன் முதலாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தது புது அனுபவமாக இருந்தது. நல்லவங்களுக்கு ஓட்டு போட்டிருக்கேன். பாரம்பரியான தேசியக்கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று சிந்தித்து வாக்களித்தேன். அரசு கலைக் கல்லூரியில் படிக்கிறேன். தமிழக அரசின் மகளிருக்கான இலவச பேருந்து திட்டமும், புதுமைப்பெண் திட்டமும் பிடித்திருக்கிறது.
வெற்றிவேல் (பி.இ., மாணவர்): 140 கோடி மக்களுக்கான அரசை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை உணர்ந்து எல்லோருமே வாக்களிப்பது அவசியம். வாக்குப்பதிவு குறைவதை தடுக்க, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தலாம். வெளியூர்களில் வேலைக்குச் சென்றவர்களால் சொந்தஊருக்குச் சென்று வாக்களிக்க முடியாததும் வாக்குப்பதிவு குறைய முக்கிய காரணம். தமிழ்நாட்டில் படித்தவர்கள் அதிகமாக இருந்தும், போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் வெளிமாநிலங்களுக்கு வேலை தேடிச்செல்வது அதிகரித்துள்ளது. அதனால் நம் மாநிலத்திலேயே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு புதிய சிந்தனையுடன் புதியவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும். நம்மை நாம்தான் ஆள வேண்டும் என்பதை மனதில் வைத்து வாக்களித்தேன். தமிழ்நாட்டில் இதற்கு முன்பும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருந்தாலும், இப்போது அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது. எங்கள் கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள்கூட கஞ்சா பயன்படுத்துவதை நேரடியாக பார்த்திருக்கிறேன். இதுவரை ஆட்சியில் இருந்த கட்சிகளுக்கு வாக்களிக்காமல், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களித்திருக்கிறேன். இங்கு எல்லோருக்கும் எல்லாமும் போய்ச் சேருவதில்லை. சாமானியர்களால் எந்தத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை உள்ளது.
பிரதீப்குமார் (பி.இ., மாணவர்): வாக்களிப்பது நமது கடமை என்பதால், முதல் தலைமுறை வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதில் யாரும் தலையிடக்கூடாது என்று என் பெற்றோரிடம் ஏற்கெனவே கூறிவிட்டேன். பிறரை குற்றம் சொல்வதை விட, நான் அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்யப்போகிறேன் என்று சொல்வதை வைத்து வாக்களித்தேன். இதுவரை மாறி மாறி ஆட்சியில் இருந்தவர்கள் எந்த வகையிலாவது மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருந்துள்ளனர். எனக்கு தேசியக் கட்சிகள் மீது பெரிதாக ஆர்வம் இல்லாததால், மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதை யார் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை விரும்பவில்லை. அதனால் புதியவருக்குதான் வாக்களித்தேன்.
பவித்ரா (பிகாம்., மாணவி): முதல்முறையாக ஓட்டு போட்டபோது நான் கொஞ்சம் பெரிய பொண்ணாகிட்டேன் என்றும், பொறுப்புமிக்க குடிமகள் ஆகிட்டேன் என்ற உணர்வும் ஏற்பட்டது. எனக்கு மட்டுமின்றி, எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று யோசித்து வாக்களித்தேன். என்னைப்போன்ற இளம் தலைமுறையினருக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும். ஒரே கல்வித் தகுதி இருந்தும் சிலருக்கு முன்னுரிமை கிடைக்கிறது. சிலர், சில காரணங்களால் ஒதுக்கப்படுகின்றனர். இப்படி எந்த விதமான மத, சாதி வேறுபாடுகளும் இருக்கக்கூடாது என்றுயோசித்து வாக்களித்தேன். சாதி, மத வேறுபாடுகளின்றி எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும். தமிழக அரசின் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம், மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் திட்டங்கள் பிடித்திருக்கிறது. எல்லோருக்கும் இந்த அரசு உணவு கொடுப்பது பிடித்திருக்கிறது. நான் ஒருமாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன்.
அக்ஷயா (பி.ஏ., தமிழ்): எனக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்ததில் இருந்தே முதன் முறையாக வாக்களிக்கப் போவதை எண்ணி ஆர்வமாக இருந்தேன். இந்த நாட்டுக்கு பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்களிக்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இதுவரை ஆட்சியில் இருக்கும் கட்சிக்குதான் வாக்களித்தேன். அவர்களை ஆதரிப்பதன் மூலம் மேலும் நல்ல திட்டங்கள் கிடைக்கும் என நம்புகிறேன். பெண்களுக்கு இலவச பஸ், மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் தருவது மேற்படிப்புக்கு உதவியாக இருக்கிறது. தமிழக அரசு, பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறது. பெண்களை ஊக்குவிக்கும் விதமாக மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதைவரவேற்கிறேன். இதை பிச்சை என்று சிலர் விமர்சிப்பதை ஏற்க முடியாது. நாம் யாரை தேர்ந்தெடுத்தோமோ அவர்கள்தான் நமக்கு உரிமைத் தொகையாக தருகிறார்கள். அதை பிச்சை என்றுசொல்ல முடியாது.
சுரேகா (பி.இ., மாணவி): முதல் முறையாக தேர்தலில் வாக்களித்தது மகிழ்ச்சியாக இருக்கு. மக்களுக்கு நல்லது செய்யும் கட்சிக்கு ஓட்டுப் போடும்படி அம்மா சொன்னாங்க. அவர் சொன்ன கட்சிக்கே வாக்களித்தேன். மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இலவச பஸ் திட்டமும், மகளிருக்கு உரிமைத்தொகை திட்டமும் பிடிச்சிருக்கு. குறிப்பாக, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த அரசு செயல்படுகிறது.
பூஜா மற்றும் ராகுல்: ராஜஸ்தான் மாநிலம்தான் எங்களுடைய பூர்வீகம். தமிழ்நாட்டில் செட்டில் ஆகிவிட்டோம். நாங்கள் பிறந்தது, படித்தது எல்லாம் இங்குதான். எங்கள் மாநிலத்தை விட தமிழ்நாட்டு கலாச்சாரமும், உணவும் பிடித்திருக்கிறது. ஆனாலும் நாங்கள் தேசியக்கட்சிக்குதான் வாக்களித்தோம். இவ்வாறு இளம் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் அனுபவங்களையும், கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.