உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை காண இன்று (21.04.2024) அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். இந்த திருக்கல்யாணத்தை எளிதாக காண பக்தர்களுக்காக மாட வீதிகளில் எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனையடுத்து சித்திரை திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பங்கேற்ற பெண்கள் தங்களது புது தாலிக்கயிற்றை மாற்றிக்கொண்டனர். மேலும் பக்தர்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் கேசரி, சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், வெஜ் பிரியாணி, தக்காளி சாதம், சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதம் ஆகியவை கொண்ட அன்னதானம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
அதே சமயம் டிஜிட்டல் முறையில் மீனாட்சிக்கு மொய் காணிக்கை செலுத்த கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.