நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.
தமிழகத்தில் நேற்று இறுதி நிலவரப்படி, 69.46 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், கடந்த தேர்தலை விட 3 சதவீத வாக்குகள் குறைந்து பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது மிகவும் கவலை அளிப்பதாக தென் சென்னை பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையத்தில் பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் இன்று ஆய்வு செய்தார். அதன் பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “வெள்ளிக்கிழமையில் தேர்தல் நடத்துகிறார்கள். 3 நாள்கள் விடுமுறை வந்ததால் வாக்கு சதவீதம் குறைந்து விடுகிறது. வாக்களிக்க வேண்டும் என்ற விதிமுறையே மாறி அது விடுமுறையாக மாற்றப்பட்டு விடுகிறது. தொடர் விடுமுறையால் வாக்களிப்பதில் ஆர்வம் குறைந்து விடுகிறது. சென்னை உள்ளிட்ட இடங்களில் வாக்கு சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது கவலை அளிக்கிறது.
வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமைகளில் தேர்தல் நாளை அறிவிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்திடம் நான் ஏற்கெனவே கோரிக்கை வைத்தேன். ஏனென்றால், அன்று தேர்தல் நடத்தினால் அதை விடுமுறையாக எடுத்துக் கொண்டு போகிறார்கள். அதனால், வார நாட்களில் தேர்தல் நடத்த கோரிக்கை வைக்கிறேன். அதை பரிசீலித்தால் நல்லது என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.