உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி, மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.