18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இதில், இரண்டாம் கட்டமாக இன்று பீகாரில் மீதமுள்ள 5 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது.
அதே வேளையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கியது. அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) வாக்குகளை அவற்றின் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய ஒப்புகைச் (VVPAT) சீட்டுகள் மூலம் 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.
இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், பீகார் மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ், ஆர்ஜேடி மற்றும் இதர இந்தியக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களின் வாக்குகளை கைப்பற்றுவதன் சாவடி மூலம் பறித்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால், அவர்கள் பழைய விளையாட்டை விளையாட முடியாது. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது அவநம்பிக்கையை உருவாக்கும் பாவத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள்.
ஆனால் இன்று, நாட்டின் உச்ச நீதிமன்றம் சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் பலமாக அறை விட்டிருக்கிறது. நம் நாட்டின் வளங்களின் மீதான முதல் உரிமை, மத வேறுபாடின்றி, இந்த நாட்டின் ஏழைகளுக்குத்தான் உள்ளது. இந்திய இந்துக்களை, தங்கள் ஓட்டு வங்கிக்காக, காங்கிரசு பாரபட்சமாக காட்டிய விதம் இன்று அம்பலமாகியுள்ளது. அவர்கள் உங்களின் உடைமைகளை, பெண்களின் மங்களசூத்திரங்களைக்கூட திருட விரும்புகிறார்கள். உங்கள் சொத்தை உங்கள் பிள்ளைகளுக்கு வாரி வழங்குவதை காங்கிரஸ் கட்சியினர் விரும்பவில்லை” என்று பேசினார்.