சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியில் உள்ள, தலைவாசல் வடகுமரை கிராமத்தில் செயல்பட்டு வருகிறது அமிர்தா சேகோ எனும் தொழிற்சாலை. இதன் உரிமையாளர் குழந்தைவேலு. இவரின் மனைவி ஹேமா. இந்தத் தம்பதிக்கு சக்திவேல் என்ற மகனும், மகளும் இருக்கின்றனர். மகனுக்கும் மகளுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. இருவரும் தங்களது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். குழந்தை வேலுவின் மகன் சக்திவேல் பி.டெக், எம்.பி.ஏ படித்துவிட்டு, தந்தையின் தொழிற்சாலைகளைக் கவனித்து வந்துள்ளார்.
கடந்த ஐந்து வருடமாக சக்திவேல் அமிர்தா சேகோ தொழிற்சாலையை நிர்வகித்து வந்துள்ளார். இந்தநிலையில், சக்திவேல் தொழிலில் கடந்த சில மாதங்களாக பெரும் பின்னடவை சந்தித்துள்ளார். இதனால் வெளியே கடன் வாங்கி தொழிலை நடத்தியுள்ளார். இதனால் அதிக கடனுக்கு ஆளாகியுள்ளார். ஒருகட்டத்தில், மகன் கடன்வாங்கி தொழில் நட்த்திவருவது, தந்தை குழந்தைவேலுக்கு தெரியவரவே இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.
ஏகப்பட்ட கடனில் சிக்கியதற்கு மகனின் பொறுப்பற்ற நிர்வாகத் திறனே காரணம் என முடிவுக்கு வந்த தந்தை, அவரது நிர்வாகத்தில் எவ்வித தலையீடும் செய்யவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதனால், தொழிற்சாலை ஊழியர்களுக்கு சம்பளம் போடுவதில்கூட சிரமத்தைச் சந்தித்துள்ளார் மகன் சக்திவேல். இதனால் தந்தைக்கு பெரம்பலூரில் உள்ள ரைஸ் மில்லின் பணத்தை எடுத்து பயன்படுத்த விரும்பியுள்ளார். ஆனால், பெரம்பலூர் தொழிற்சாலையில் குழந்தைவேலுவுக்கு 50 சதவிகித பங்கும், குழந்தை வேலுவின் மாமனார் குடும்பத்திற்கு கணிசமான பங்கும் இருந்துள்ளது. குழந்தைவேலுதான் முழுமையாக அதனைப் பார்த்து வந்துள்ளார். பணம் இருந்தும் தந்தை, தனது கடன் பிரச்சனைக்கு உதவவில்லை எனக் குழந்தைவேலு மீது மகன் சக்திவேல் ஆத்திரத்தில் இருந்துவந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் உள்ள தனது வீட்டில் உள்ள திண்ணையில் குழந்தைவேலு உட்கார்ந்திருந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, சக்திவேல் அவரிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். பின்னர், குழந்தைவேலுவைத் தனது இரண்டு கைகளால் மாறி மாறி சக்திவேல் தாக்கி உள்ளார். இதைக்கண்ட குழந்தைவேலுவின் மனைவி ஹேமா மற்றும் வேலையாட்கள் சக்திவேலினை வந்து பிடித்து தடுத்து நிறுத்தி உள்ளனர். ஆனாலும் ஆத்திரம் அடங்காத சக்திவேல், தனது தந்தையை முகத்தில் தாக்கி உள்ளார். இதில் நிலைகுலைந்துபோன குழந்தைவேலு உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உடலில் காயங்கள் அதிகமாக இருந்ததால் மருத்துவமனையில் இருந்து கைகளத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் எஸ்.ஐ பழனிசாமி விசாரணை நடத்தியுள்ளார். மறுபுறம், சிகிச்சை முடிந்து வெளியேவந்த குழந்தைவேலு தனக்கும், தன் மகனுக்கும் உள்ள பிரச்னையைத் தாங்களே பேசி முடித்துக் கொள்வதாக எழுதிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிகிச்சை முடிந்து வீடுதிரும்பிய இரண்டு நாட்களில் குழந்தைவேலு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் குழந்தைவேலுவை பிப்ரவரி 16 அன்று சக்திவேல் தாக்கியது, அவர்களது வீட்டில் உள்ள சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதன் மூலம் கைகளத்தூர் போலீஸார் சக்திவேலினை கைதுசெய்து மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். கடைசிவரை மகனைக் காட்டிக் கொடுக்காமல் இருந்த தந்தை அவமானம் தாங்காமல் மருந்து குடித்து உயிரை மாய்த்துக்கொன்டாலும், தற்போது இரண்டு மாதங்களுக்கு பிறகு உண்மை வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.