தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, 15 நாட்கள் அரசு முறைப் பயணமாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். சான்ஸ்பிரான்ஸ்கோ விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினை, சான்ஸ்பிரான்ஸிஸ்கோவின் இந்தியாவிற்கான துணைத் தூதர் சிரிகர்ரெட்டி மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார். தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, திமுகவின் சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளரும் அயலக தமிழர் நலவாரிய தலைவருமான கார்த்திகேய சிவசேனாதிபதி மற்றும் அமெரிக்கா வாழ் தமிழர்கள் ஆகியோர் உற்சாக வரவேற்பை அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து சான்பிரான்சிஸ்கோவில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், புதிய அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வர வர வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார். மேலும் இந்த மாநாட்டில் பல் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து, சென்னை, மதுரை, செங்கல்பட்டு உள்ளிட்ட நகரங்களில் 4,100 வேலைவாய்ப்புகளுக்கு வழி வகுக்கும் வகையில் நேற்று ஒரே நாளில் ரூ.900 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின், ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் அலுவலகங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அதன்பின்பு அதன் உயர் அதிகாரிகளைச் சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் கூகுள் நிறுவனத்துடன் ஏஐ ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வின்போது, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, வர்த்தக செயலர் வி.அருண் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.