திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை செங்கம் அடுத்த சே.அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாம்பசிவம். இவர் மனைவி சாந்தி. இவருக்கு அஜித் குமார் என்ற மகன் உள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பே சாம்பசிவம் இறந்துவிட்டார். 29 வயதாகும் அஜித்குமார் சென்னையில் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு பூர்வீக கிராமமான சே.அகரத்தில் ஒரு வீடும் காலி மனையும், பெரும்பாக்கம் கிராமத்தில் ஒரு ஏக்கர் விவசாய நிலமும் உள்ளது. இதில் பல ஆண்டுகளாக பயிர் செய்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், சாந்திக்கு வயதாகிவிட்டதால் அந்த இடத்தை அளந்து தனது மகன் அஜித்குமாரின் பெயரில் எழுதி வைக்க முடிவு செய்துள்ளார். இதற்காக நிலத்தையும் காலி மனையையும் அளக்க முடிவு செய்துள்ளனர். சே.அகரம் கிராம நிர்வாக அலுவலரிடம் விவரம் கேட்டபோது அவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க சொல்லி உள்ளனர். அதன்படி 18 .11.2024-ம் தேதி அஜித்குமார் மனு செய்துள்ளார். மனு செய்த பின் கிராம நிர்வாக அலுவலர் அஜித்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு அழைத்துள்ளனர். அவரும் விடுமுறை எடுத்துக் கொண்டு வந்து இவர்களை சந்தித்துள்ளார்.
கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் அரிகிருஷ்ணன், வீட்டுமனையும் நிலத்தையும் அளக்க வேண்டும் என்றால் 15 ஆயிரம் ரூபாய் சர்வேயர், விஏஓ போன்றவருக்கு தர வேண்டும் என லஞ்சம் கேட்டுள்ளார். அவரும் அதற்கு ஒப்புக்கொண்டு உள்ளார். அதன்படி 7500 ரூபாய் பணம் ரொக்கமாக பெற்றுள்ளார். மீதி பணத்தை ரஞ்சித் குமார் என்பவரின் பெயரில் கூகுள் பே மூலம் அனுப்ப சொல்லி உள்ளார். அவரும் பணத்தை அனுப்பி உள்ளார். பணம் பெற்றுக் கொண்ட பிறகும் அவர்கள் அளந்து தராமல் விட்டுள்ளனர்.
இதுகுறித்து சென்னையில் இருந்து அஜித் குமார் தொடர்பு கொண்டு கேட்டபோது, நக்கலாகவும் திமிராகவும் பதில் கூறியுள்ளனர். அவர் அப்போதும் பொறுத்துக் கொண்டு நான் காவல்துறையில் பணியாற்றுகிறேன் என்னால் அடிக்கடி லீவு போட்டுவிட்டு வர முடியாது எனக்கு கொஞ்சம் வேகமாக அளந்து கொடுங்கள் என கேட்டுள்ளார். அப்பொழுதும் இவர்கள் அசைந்து கொடுக்கவில்லை, மீதி பணத்தை தந்தால் தான் அளப்போம் இல்லன்னா முடியாது. உன்னால முடிஞ்சத பார்த்துக்க என்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கடந்த 27 ஆம் தேதி புகார் வந்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி முழுமையாக விசாரித்து விட்டு அவரிடம் புகார் எழுதி வாங்கிக்கொண்டு இன்று மீதி பணத்தை அஜித்திடம் லஞ்ச ஒழிப்புத்துறை தந்து அனுப்பினர். அந்த பணத்தைக் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் அரிகிருஷ்ணன் மற்றும் சர்வே துறையில் பயிற்சி பெற்ற சர்வேயராக பணியாற்றும் வெளி நபரான ரஞ்சித் குமார் வாங்கியபோது கைது செய்யப்பட்டனர். அதன்பின்பு அவர்களை அழைத்து வந்து திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து டிஎஸ்பி திருவேல் முருகன் மற்றும் காவல் ஆய்வாளர் அருண்பிரசாத் மற்றும் உதவி ஆய்வாளர் மதன் மோகன் மற்றும் கோபிநாத் கொண்ட 7 பேர் கொண்ட குழுவினர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.
வருவாய்த் துறையில் பல கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் நில அளவீடு துறையில் உள்ள சர்வேயர்கள், தங்களுக்கு பதில் வேலை செய்ய அதே துறையில் வேலை செய்துவிட்டு ஓய்வு பெற்ற பணியாளர்களையும், கல்லூரி படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களை பயன்படுத்தி லஞ்சம் வாங்குவது, அளவீடு செய்வது போன்ற பணிகளை செய்கின்றனர். அதுபோன்று தான் இந்த சே.அகரம் கிராமத்திலும் நடந்துள்ளது. தவறு செய்த இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போல் தங்கள் பணியை செய்யாமல் வெளி ஆட்களை வைத்துப் பணி செய்யும் வருவாய்த்துறை அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் சமூக ஆர்வலர்.