கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பம் பகுதிக்கு உட்பட்ட வடக்குவெள்ளுர் கிராமத்தில் என்.எல்.சி. நிறுவனத்தின் மூலம் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள குடியிருப்பு பகுதிகளை என்.எல்.சி. நிறுவனம் திடீரென அகற்ற முற்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் அசோக்குமார் மற்றும் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனர்.
பின்னர் குடியிருப்புவாசிகள் குடியிருப்புகளை காலி செய்ய எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களுடன் பா.ம.க.வினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து காவல்துறையினர் குவிக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
வருவாய்த்துறை, என்.எல்.சி. பொதுமக்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி, மாற்று இடம் கொடுத்தால் மட்டுமே இடத்தை அகற்ற முடியும் எனப் போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து தற்காலிகமாகக் குடியிருப்புகளை அகற்றும் பணி நிறுத்தப்பட்டது.