Skip to main content

“மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறார் முதல்வர் ” - அமைச்சர் ஐ.பெரியசாமி

Published on 04/12/2024 | Edited on 04/12/2024
cm stalin is providing various benefits to the special person says Minister I. Periyasamy

திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் இன்று  நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிக்கான தின விழா நடைபெற்றது.  விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி,  தலைமை தாங்கினார். இவ்விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி  கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

அதன்பின் பேசிய அமைச்சர், “முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் ஆட்சி காலத்தில், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள்  செயல்படுத்தப்பட்டன. அந்த வகையில் சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு  கனிவுடன் உதவிட வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மற்ற துறைகளை காட்டிலும் மாற்றுத்திறனாளிகள்  நலத்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். மாற்றுத்திறனாளிகளின் நலனில் மிகவும் அக்கரை கொண்ட தமிழ்நாடு  முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை தனது கட்டுபாட்டில் வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து  சலுகைகளை வழங்கி வருகிறார். சமூகத்தில் அடித்தட்டில் இருக்கின்ற  மக்களுக்கும் நன்மை செய்திடும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு  திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு  அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள்  நலத்துறை மூலம் மூன்று சக்கர சைக்கிள், மடக்கு சக்கர நாற்காலி, ஊன்று  கோல்கள், முடநீக்கு சாதனம், செயற்கை கால் செயற்கை கை, நவீன செயற்கை  கால் போன்ற உபகரணங்கள் வழங்கப்படுகிறது. பார்வையற்றோருக்கு   பிரெய்லி கை கடிகாரம், கருப்பு கண்ணாடி மற்றும் மடக்கு ஊன்றுகோல்  வழங்கப்படுகிறது, செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கு காதுகேட்கும் கருவி  வழங்கப்படுகிறது. 

இரண்டு கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம்  பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டு வருகிறது.  தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்றத்தில், ஒரு கால் பாதிக்கப்பட்டு பணிக்கு செல்கின்ற மற்றும் சுயதொழில் செய்கின்ற  மாற்றுத்திறனாளிகளுக்கும் பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்க நிபந்தனையை  தளர்த்தி உத்தரவு வழங்கியுள்ளார்.

கடந்த ஆண்டு மட்டும் 136 மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. நடப்பு ஆண்டு  திண்டுக்கல் மாவட்டத்திற்கு மட்டும் 500 மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல்  ஸ்கூட்டர் வழங்க உத்தரவு வழங்கியுள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கு  திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.25,000 மற்றும் 8 கிராம் தங்கம்  வழங்கப்படுகிறது. பட்டப்படிப்பு முடித்து இருந்தால் திருமண நிதியுதவி ரூ.50,000    மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கி  கடன் ரூ.25,000 மானியத்துடன் வழங்கப்படுகிறது.  தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மன வளர்ச்சி குன்றியோர் மற்றும்  கடும் மாற்றுத்திறனாளிகளுக்கு   வழங்கப்பட்ட பராமரிப்பு உதவித்தொகையை  ரூ.1,500-லிருந்து ரூ.2,000-ஆக உயர்த்தி வழங்கியுள்ளார்கள்.  இத்திட்டத்தில்  மட்டும் திண்டுக்கல் மாவட்டத்தில் 7,811 மாற்றுத்திறனாளிகள் பயனடைந்து  வருகின்றனர். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் கல்வி பயிலும்  மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகையை இரண்டு மடங்காக உயர்த்தி வழங்கியுள்ளார். அதன்படி ரூ.1000 முதல் ரூ.7,000 வரை உதவித்தொகை பெற்று வந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் தற்போது ரூ.2,000  முதல் ரூ.14,000 வரை கல்வி உதவித்தொகை பெற்று வருகின்றனர்.

cm stalin is providing various benefits to the special person says Minister I. Periyasamy

திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2023-2024-ஆம் நிதியாண்டில் மட்டும் பல்வேறு திட்டங்களில் கீழ் 8,869  பயனாளிகளுக்கு ரூ.20.68 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவித்தொகை  வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிக்கு  தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தில் 90 பயனாளிகளுக்கும், கடுமையாக பாதிக்கப்பட்ட  மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல்  ஸ்கூட்டர் 146 பயனாளிகளுக்கும், மூன்று சக்கர சைக்கிள்  60 பயனாளிகளுக்கும்,   மடக்கு சக்கர நாற்காலி  80 பயனாளிகளுக்கும்,  சிறப்பு சக்கர நாற்காலி 30  பயனாளிகளுக்கும், பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி 15  பயனாளிகளுக்கும், ஊன்றுகோல் வழங்கும் திட்டத்தில் 50 பயனாளிகளுக்கும், நவீன செயற்கை அவயம் 8 பயனாளிகளுக்கும், செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கு காதொலி கருவி 180 பயனாளிகளுக்கும்,  பார்வையற்றவருக்கு கருப்பு கண்ணாடி  50 பயனாளிகளுக்கும்,  பார்வையற்றவருக்கான பிரெய்லி கைக்கடிகாரம் 50 பயனாளிகளுக்கும் என  மொத்தம் 759 பயனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.  

திண்டுக்கல் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி  உபகரணங்கள் வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பயனாளிகள்  தேர்வு செய்வதற்கு வட்ட வாரியாக சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. மொத்தம் 11  இடங்களில் நடைபெற்ற முகாமில் 1200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள்  கலந்து கொண்டனர். முகாமில்  கலந்து கொண்டவர்களில் 712 மாற்றுத்திறனாளிகள் உதவி உபகரணங்கள் வழங்க தேர்வு செய்யப்பட்டனர்.  அதன்படி, மோட்டார் பொருத்திய  மூன்று சக்கர வாகனம் 8, பேட்டரியால்  இயங்கும் சக்கர நாற்காலி 21, மூன்று சக்கர சைக்கிள் 30, மடக்கு சக்கர நாற்காலி    86, ஊன்று கோல்கள் 14, எல்போ கிரட்சஸ் 104, ஊன்றுகோல் (கைத்தடி) 53,  ரோலேட்டர் (நடைப்பயிற்சி சாதனம்) 17, மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சக்கர நாற்காலி 8, தொழுநோயால் பாதிக்கப்படவர்களுக்கு சாதனம் (யுனுடு முவை) 7, காதொலி கருவி 206, சுமார்ட்  போன்   9, சிறப்பு குழந்தைகளுக்கான கல்வி கற்பிக்கும் சாதனம் 328, செயற்கை  கால் 63, செயற்கை கை 12, முடநீக்கு சாதனம் 58 ஆகியவை வழங்கப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் செப்டம்பர் மற்றும் அக்டோபர்  மாதங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட  712  மாற்றுத்திறனாளிகளுக்கு  ஸ்டீல் அத்தரிட்டி ஆப் இந்தியா லிமிடெட் மூலம் ரூ.77.00 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் இன்றைய விழாவில் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் நலனில் அதிக முக்கியத்துவம்  அளிக்கும் முதலமைச்சராக தமிழ்நாடு முதலமைச்சர்  செயல்பட்டு வருகிறார்” என்று கூறினார். 

நிகழ்ச்சியில், வேடசந்தூர் சட்டமன்ற  உறுப்பினர் காந்திராஜன், திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி  ஜோதிபிரகாஷ், துணைமேயர் ராஜப்பா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன், ஸ்டீல் அத்தரிட்டி ஆப் இந்தியா லிமிடெட்  தலைமை  நிர்வாக அலுவலர் கௌதம்தாஸ், அலிம்கோ நிர்வாகி சிவக்குமார் மற்றும் பலர்  கலந்துகொண்டனர்.

சார்ந்த செய்திகள்